Politics
தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம் : “புதிய இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” - வைகோ வலியுறுத்தல்!
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயக அரசுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான வைகோ அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகி விட்டன.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை, அவர்களது மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைச் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை அரசால் 2018 ஜனவரி 24 இல் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் மிக அதிக அளவில் அபராதம் விதிக்கப்படுகின்றன.
இலங்கை ரூபாய் மதிப்பில் 50 இலட்சம் முதல் 17.5 கோடி வரையில் அந்நாட்டுச் சட்டப்படி அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில், இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்ததாக வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மீன்பிடித் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிக்கை இலங்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று நீதிமன்றக் காவலில் வைத்தது. அதோடு, மீனவர்கள் மீது அதிகக் குதிரைத் திறன் கொண்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும் கூடுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரும், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். இதில் 12 பேருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 42 இலட்சம் ஆகும். இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைப்போல, தூத்துக்குடி - தருவைக்குளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.50 கோடி அபராதமும், ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ம் தேதி ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 35 மீனவர்களை கைது செய்து அவர்களது 4 படகுகளையும் வலைகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 35 மீனவர்கள் புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.
புத்தளம் நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி 35 மீனவர்களில் 12 பேருக்கு தலா ரூ35 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின்னர் ஒரு 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 10 மீனவர்களுக்கும் தலா ரூ35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது புத்தளம் நீதிமன்றம். அதாவது 45 தமிழக மீனவர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி அபராதம் விதித்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மீனவர்கள் உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 கோடி என்பது இந்திய மதிப்பில் 2.76 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடை சட்டத்தின் படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசு, இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயக அரசுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் , கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!