Politics

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மற்றொரு சர்ச்சை பேச்சு! : தேசிய அளவில் குவியும் கண்டனங்கள்!

மாநில அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையில் தகவல் பரிமாற்றம் செய்யும் பணியையே முதன்மை பணியாகக் கொண்டி செயல்படும் ஆளுநர் பதவியை வைத்து, கருத்தியல் திணிப்பு செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாட்டை கடந்து, தேசிய அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

முன்னாள் ஒன்றிய ஆட்சிப்பணியாளர் என்ற முறையில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை அறிந்திருக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய மக்களின் வரலாற்றையும், கருத்தியலையும், அரசியலையும் அவமதிக்கும் வகையில் பல கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

குறிப்பாக, ஒன்றியத்தில் ஆட்சியமைத்திருக்கிற பா.ஜ.க.வின் செயல்பாடுகளை சரி என்று நிரூபிப்பதும், பா.ஜ.க.வின் கருத்தியல் தலைமையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்புவதுமே ஆளுநர் ஆர்.என். ரவியின் தலையாய நோக்கமாக இருக்கிறது.

மதச்சார்பற்ற உலக பொதுமறையாளர் திருவள்ளுவருக்கு காவி அணிவித்து, மதப்பூசல் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், மதச்சார்பின்மையே இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல என்றும், அது ஆங்கிலேயரிடம் இருந்து பெறப்பட்ட கொள்கை என்றுமான சர்ச்சைக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இதற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சிவசேனா (தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “ஆளுநர் பதவி கூட ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து வந்ததுதான். அதை முதலில் ஒழித்து விடுவோமா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர்களையடுத்து, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், “வழக்கம்போல் ஆளுநர் உளறிக் கொட்டியிருக்கிறார். கூட்டாட்சி கூட ஐரோப்பிய கருத்தாக்கம் தான். அதை மறுத்துவிட முடியுமா? வாக்குரிமை கூட ஐரோப்பாவில் இருந்து வந்ததுதான். மக்களாட்சி முறை கூட ஐரோப்பாவை சேர்ந்ததுதான். இங்கு ராஜாக்களும், மகாராஜாக்களும்தான் ஆண்டு கொண்டிருந்தனர். ஜனநாயகத்தையும் தூர எறிந்து விடலாமா? அலங்காரப் பதவியில் அமர்ந்து கொண்டு கண்டதை பேசக் கூடாது அவர்” என விமர்சித்துள்ளார்.

Also Read: மூடா வழக்கு - ”பா.ஜ.கவின் சதித்திட்டம் இது” : துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!