Politics

மன அழுத்தத்தை போக்க கடவுள் நம்பிக்கை? - இளம்பெண் இறப்பு குறித்து நிர்மலா சீதாராமனின் கருத்தால் சர்ச்சை !

கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் (Anna Sebastian Perayil) என்ற 26 வயது இளம்பெண் சிஏ படிப்பு முடித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் புனேவில் அமைந்துள்ள எர்ன்ஸ்ட்& யங் (EY Pune) என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தனது முதல் வேலை என்பதால், மிகவும் ஆர்வமாக பணியில் சேர்ந்த இவர், வெறும் 4 மாதங்களில் பணிச்சுமையால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னா செபாஸ்டியன் அதிகமான பணிச்சுமை காரணத்தினால் சரியாக சாப்பாடு, தூக்கம் என்று எல்லாம் பாதிக்கப்பட்டு இறுதியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பணிச்சுமை குறித்து தனது பெற்றோரிடம் தினமும் புலம்பி வந்த இவருக்கு, பலமுறை வேலையை விடச்சொல்லி குடும்பத்தினர் கூறி வந்த நிலையிலும், தான் ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்புவதாக கூறி பணியில் நீடித்துள்ளார்.

விடுமுறை, பணி நேரம் முடிந்த பிறகும் அவரது அலுவலகத்தில் இருந்து பணிகளை செய்து முடிக்க வற்புறுத்தியதால் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். அன்னா செபாஸ்டியனின் இறுதி சடங்கிற்கும் அலுவலகத்தில் இருந்து யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்று அவரது தாயார் அனிதா அகஸ்டின் குமுறியுள்ளார்.

தனது மகளின் மரணத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு பணிச்சுமை கொடுக்க கூடாது என்று அந்த எர்ன்ஸ்ட்& யங் நிறுவனத்தின் மேலதிகாரிக்கு உயிரிழந்த இளம்பெண்ணின் தாயார் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

தற்போதுள்ள நவீன உலகில் ஐடி-யில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை பழு அதிகமாக கொடுக்கப்படுவதால் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். அண்மையில் சீனாவில் ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு 104 நாள்கள் தொடர்ந்து வேலை செய்த நபர் ஒருவர், நியூமோகாக்கல் என்ற தொற்று ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தார்.

இப்படியாக வேலை பழு காரணமாக நாடு அல்ல உலகம் முழுவதும் பலரும் உயிரிழந்து வருகின்றனர். பலரும் சாப்பிடவும், தூங்கவும் கூட நேரம் ஒதுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் அன்னா செபாஸ்டியனின் இழப்பு பலரையும் வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அந்நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன அழுத்தம் போக வேண்டுமென்றால் கடவுளை வழிபடவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நேற்று (செப்.22) தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “என்ன வேண்டுமானால் படிக்கலாம், எந்த வேலைக்கும் செல்லலாம். ஆனால் அழுத்தங்களை கையாள மனவலிமை வேண்டும். கடவுளால் மட்டும்தான் இந்த வலிமையை கொடுக்க முடியும். கடவுளை நம்ப வேண்டும்.

இதனை குடும்பங்கள்தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். கடவுளை நம்பினால், கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும். ஒழுக்கம் கிடைக்கும். ஆத்மசக்தி வளரும். ஆத்ம சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு Inner Strength வளரும். கல்வி நிறுவனங்கள் தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் குழந்தைகளுக்கு உள் வலிமை கிடைக்கும்.” என்றார். ஒன்றிய அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பலர் மத்தியிலும் கண்டன்ங்களை எழுப்பி வருகிறது.

Also Read: “மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்” - ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!