Politics

நீட் முறைகேடு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது CBI... தேர்வு தாள் கசிவால் பயனடைந்த 150 மாணவர்கள் !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.

இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிபிஐ விசாரணை செய்து நீட் தேர்வுத்தாள் கசிவை உறுதி செய்தனர். மேலும் இது குறித்த முதல் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஜார்கண்ட் நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றப் பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர், தனியார் பள்ளி முதல்வர் ஆகிய 6 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியிலிருந்து திருடிய வினாத்தாள் பாட்னா எய்ம்ஸ், ராஞ்சி ரிம்ஸ், பரத்பூர் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் மூலம் அதற்கு விடை காணப்பட்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அது தவிர 150 மருத்துவ மாணவர்கள் இந்த கேள்வித்தாள் கசிவு மூலம் பயனடைந்து இருக்கலாம் என்று சிபிஐ கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read: மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்கள் : சாதனை படைக்கும் முதலமைச்சர்... பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !