Politics

இலங்கை அதிபர் தேர்தலில் அநுரா திசநாயகே வெற்றி! : 9ஆவது அதிபராக பதவியேற்கிறார் அநுரா!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிபர் தேர்தல் முடிவடைந்து, 9ஆவது அதிபராக அநுரா திசநாயகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 13,421 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில், சுமார் 63 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தமாக தயார் நிலையில் இருந்தனர். எனவே, வன்முறை இல்லாத தேர்தலாக, இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்னிலை வகித்த அநுரா, இறுதிவரை முன்னிலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

அதன்படி, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அனுரா குமார திசநாயகே. இவர், ஆட்சியைக் கைப்பற்றினால் அதானி குழுமத்தை வெளியேற்றுவோம் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய சிந்தனையாளராக அடையாளப்படும் அநுரா, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, தொழிலாளர்களின் நிலைகளிலிருந்து எண்ணி, அது குறித்த ஆக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் பூங்கா, பசுமைவெளி அமைக்கப்படும்!: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!