Politics

மாநிலக் கட்சிகளை முடக்கவே ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் : தீக்கதிர் தலையங்கம் விமர்சனம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால்தான் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஊழல் என்றெல்லாம் திணிக்க முடியும். ஜனநாயகத்தில், பன்முகத் தன்மையில் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் இதைக் கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டுமென “தீக்கதிர்” நாளேடு தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

அது வருமாறு :- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் முடிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த 11 பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒப்புதலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

செலவைக் குறைக்கலாம் என்பதுதான் பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் நடத்தலாம் என்பதோடு, பின்னர் இதில் உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசியலமைப்பு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

அரசியல் சட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பணிகள் தெளிவாகப் பிரிக்கப் பட்டுள்ளன. யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று தெளிவான வரையறை உள்ளது. இதில் தலையீடுகள் ஏற்பட்டால் அரசியல் சட்டத்தின்படி எது சரி என்பதை நீதித்துறை தெளிவுபடுத்தும். இப்படித்தான் நமது நாடு இயங்கி வருகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சினைகள் வெவ்வேறாகவே இருந்து வருகின்றன. ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சியை மதிப்பீடு செய்து, மக்களவைத் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலங்க ளில் இருக்கும் ஆட்சியை மதிப்பீடு செய்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சிக்கும், சட்ட மன்றத் தேர்தலில் வேறொரு கட்சிக்கும் வாக்களிப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

மோடி அரசைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் தங்களின் மத வெறி, பெருமுதலாளி ஆதரவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாம் என்றே திட்டமிடுகிறது. மாநிலங்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவையாக பிராந்தியக் கட்சிகள் உள்ளன.

நாட்டில் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் உள்ளன. இவற்றை முடக்கும் நோக்கத்திலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படுகிறது. கேரளா உட்பட பல மாநிலங்களில் உள்ளாட்சிகளுக்கு என்று தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. அதற்கான தேர்தலில் மக்கள் முன்பாக இருக்கும் பிரச்சினைகளும் மாறுபட்டதாகவே இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலும் இந்த வரையறைக்குட்பட்டால் பெறும் குழப்பமே மிஞ்சும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால்தான் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஊழல் என்றெல்லாம் திணிக்க முடியும். ஜனநாயகத்தில், பன் முகத்தன்மையில் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் இதைக் கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டும். இவ்வாறு அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி முழங்காலுக்கு கீழ் சுடப்பட்டு கைது : கோவையில் போலீசார் அதிரடி !