Politics

ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டத்தின் பின்னணி? : செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு திறன் இருக்கிறதா?

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில், மக்களாட்சி நடக்கிறதா என்ற கேள்வி, கடந்த 10 ஆண்டுகளில் வலுத்துள்ளது.

குறிப்பாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், மோசடிகளும் அதனை மேலும் தெளிவுபடுத்துவதாய் இருக்கின்றன. 18 வயது நிரம்பாதவர்கள், வாக்களிக்கவே தகுதிபெறாதவர்களாக இருக்கும் நிலையில், வாக்கு இயந்திரங்களை 10 வயது சிறுவர் பொம்மை போல் கையாண்டதும்; வாக்குச்சாவடிகளுக்குள் வழிபாடு நடத்தப்பட்டதும்; சிறுபான்மையினர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதும்; மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், அதற்கு எடுத்துகாட்டுகளாக அமைந்தவையே.

இவ்வாறான நிகழ்வுகளே, மக்களாட்சி நடைமுறையை பாதி ஒழித்துவிட்ட நிலையில், மேலும் ஒழிக்கும் நடைமுறையாக தான், ஒரே நாடு - ஒரே தேர்தல் கருதப்படுகிறது.

காரணம், தென் இந்திய மக்களின் அரசியல் புரிதலும், வடகிழக்கு மக்களின் அரசியல் புரிதலும், வட இந்திய மக்களின் அரசியல் புரிதலும், பல வகையில் மாறுபட்டது.

ஒரு மாநிலத்தில் முன்னெடுக்கப்படுகிற பிரச்சாரங்களை, மற்றொரு மாநிலத்தில் முன்னெடுத்தால் எடுபடாமல் போக பல வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் சமூக நீதி, சம உரிமை, கல்வி, மத நல்லிணக்கம், வளர்ச்சி, மொழிப்பற்று, மக்கள் தொடர்பு உள்ளிட்டவற்றை தவிர்த்த பிரச்சாரம் எடுபடாது. ஆனால், இவற்றை தவிர்த்து, இராம ராஜ்யம் என்ற ஒற்றை கூச்சலால், பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க நேரிடுகிறது.

இந்த வேற்றுமையால், பா.ஜ.க.வினரை பொறுத்தவரை, தெற்கில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது முற்றிலும் இயலாததாய் அமைந்துள்ளது. அதனை செய்து காட்ட, முன்மொழிந்துள்ள திட்டம் தான் ஒரே நாடு - ஒரே தேர்தல்.

ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரே தேர்தல் நடைபெற்றால், தென் மாநில மக்களின் தலையெழுத்தும், மற்ற மாநில மக்களால் எழுதப்படும். மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கும் தனிப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒட்டு மொத்த அதிகாரமும், ஒன்றியத்தையே சென்று சேரும்.

இதனால், பா.ஜ.க.வின் ஒடுக்குமுறை கருத்தியலை ஏற்காதவர்களும், பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் வாழ்கிற நிலைக்கு தள்ளப்படுவர். இதன் காரணமாகவே, ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறையை, இந்தியா கூட்டணியும், சமூக சீர்த்திருத்த எண்ணம் கொண்டவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தும் திறன், தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா என்ற கேள்வியும் மறுபுறம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

காரணம், ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலையே ஒரு கட்டமாக நடத்துவது, தேர்தல் ஆணையத்திற்கு கடுமையான வேலையாக அமைந்துள்ளது. அதுவும், ஒரே நேரத்தில், 4 சட்டப்பேரவை தேர்தல்கள் என்றால், வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் நீடிக்கிறது.

மற்ற நாடுகளில், 24 மணிநேரத்தில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை இரண்டுமே முடிக்கப்படும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும், EVM என்று புகழ்பாடி வரும் தேர்தல் ஆணையத்தால், அது இயலாத காரியமாகவே அமைந்துள்ளது.

மேலும், மக்களாட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பில் இருந்து செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, கடந்த தேர்தலிலிருந்து, பா.ஜ.க.வின் ஆணைகளைக் கேட்டு செயல்படுவது மக்களின் உரிமை மீறல்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகவும் ஆபத்தானவர்கள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!