Politics

மாணவர் தலைவர் - தலைசிறந்த நாடாளுமன்றவாதி - CPM பொதுச் செயலாளர் : இந்திய அரசியலின் கர்ஜனை!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி செப்டம்பர் 12 வியாழனன்று மாலை 3.30 மணியளவில் தில்லியில் காலமானார். அவருக்கு வயது 72.

இந்திய அரசியலின் விடிவெள்ளிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நவீனகால முகமாக திகழ்ந்தவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சோப லட்சம் தோழர்களின், ஆதரவாளர்களின் வற்றாத நம்பிக்கையாகவும் மிகப்பெரும் ஆதர்ஷ சக்தியாகவும் திகழ்ந்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி.

1952 ஆகஸ்ட 12 அன்று சென்னையில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் யெச்சூரி. அவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜூலா யெச்சூரி; தாயார் கல்பகம் யெச்சூரி. இவர்களது பூர்வீகம் ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடா ஆகும். சீதாராம் யெச்சூரியின் தந்தை ஆந்திரப்பிரதேச சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் ஒரு பொறியாளராக பணியாற்றியவர். அவரது தாயார் காக்கிநாடாவில் அரசு ஊழியராக பணியாற்றியவர். சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி, ஹைதராபாத்தில் வளர்ந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன்பிறகு அவர்களது குடும்பம் தில்லிக்கு இடம்பெயர்ந்தது. அங்குள்ள பிரசிடென்ட் எஸ்டேட் பள்ளியில் மேல்நிலைக் கல்வியில் இணைந்தார். சிபிஎஸ்இ மேல்நிலைக் கல்வித் தேர்வில் அகில இந்தியாவில் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றவர் சீதாராம் யெச்சூரி. அதைத்தொடர்ந்து தில்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. (ஆனர்ஸ்) பொருளாதார படிப்பில் சேர்ந்து சிறந்த மாணவராக உருவானார்.

அதைத்தொடர்ந்து புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பொருளாதாரம் படிப்பில் இணைந்தார். இப்படிப்பிலும் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக பிஎச்டி படிப்பில் இணைந்தார்.

இதே காலக்கட்டத்தில் நாடே திரும்பிப் பார்க்கும் விதத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மகத்தான தலைவராக மிளிர்ந்தார். 1975 காலக்கட்டத்தில் அன்றைய இந்திரா காந்தி அரசு அவசரநிலை அமல்படுத்தியதை எதிர்த்து பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு தலைமையேற்றவர் சீத்தாராம் யெச்சூரி. பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தையே மாணவர் படையோடு சேர்ந்து முற்றுகையிட்ட மகத்தான போராட்டத்திற்கு தலைமையேற்ற சீத்தாராம் யெச்சூரி, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது முனைவர் பட்டப்படிப்பை தொடர இயலாமல் போனது.

இதேகாலக்கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த சீதாராம் யெச்சூரி, அவசரநிலைக் காலத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்பு சில காலம் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார்.

அவசரநிலைக் காலம் முடிந்த பிறகு பல்கலைக்கழக மாணவர் என்ற முறையில், 1977-78ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக பொறுப்பேற்ற தோழர் பிரகாஷ் காரத் அவர்களும், சீதாராம் யெச்சூரியும் இணைந்து தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இடதுசாரி இயக்கத்தின் வலுவான தலமாக மாற்றினார்கள்.

1978ல் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளராகவும், அதைத்தொடர்ந்து சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1984ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் தலைவர் சீதாராம் யெச்சூரி. 1985ல் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 5 பேர் கொண்ட மத்திய செயற்குழு உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட முதல் மத்திய செயற்குழுவில் மிக இளம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சீதாராம் யெச்சூரி. பிரகாஷ் காரத், சுனில் மொய்த்ரா, பி.ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை ஆகிய தலைவர்களோடு மத்திய செயற்குழுவில் செயலாற்றினார். அப்போது முதல் நேரடியாக கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடத் துவங்கினார்.

1986ல் இந்திய மாணவர் சங்கத்தின் பொறுப்புகளிலிருந்து சீதாராம் யெச்சூரி விடுவிக்கப்பட்டார்.

1992ல் சென்னையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2015 ஏப்ரல் 19 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் 5வது பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2018ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற 22வது அகில இந்திய மாநாட்டிலும், 2022ல் கண்ணூரில் நடைபெற்ற 23வது அகில இந்திய மாநாட்டிலும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றி வந்தார் தோழர் சீதாராம் யெச்சூரி.

கட்சியின் விதிகளின்படி பொதுச் செயலாளர் பொறுப்பினை மூன்று முறை நிறைவு செய்து, 2025ல் மதுரையில் நடைபெற உள்ள 24வது அகில இந்திய மாநாட்டுடன் அவரது பொறுப்பு நிறைவுபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களுமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு உள்ளிட்ட நவரத்தினங்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியவர்.

இந்திய அரசியலில் கூட்டணி ஆட்சிக்கு வித்திட்ட தலைவர் சுர்ஜித். அவரோடு இணைந்து இந்திய அரசியலை அந்த திசை வழியில் மிகவும் திறம்பட நகர்த்திச் சென்றவர்களில் முதன்மையானவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. 1996ல் அமைந்த ஐக்கிய முன்னணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்கியதில், அந்த அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து நுட்பமாக பணியாற்றியவர் சீதாராம் யெச்சூரி. அதைத்தொடர்ந்து 2004ல் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைவதில் முதன்மைப் பங்கு ஆற்றியவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி.

தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காக உரத்துக் குரல் எழுப்பியவர் சீதாராம். அதன் காரணமாகவே அவர் இந்திய அரசியலில் மதவெறி சக்திகளின் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடிப்படை என்பதை உரத்து முழங்கிய அவர், இந்திய பாட்டாளி வர்க்கத்தின் படைத் தளபதியாக ஒரு துளி அளவும் சமரசமின்றி கர்ஜனை செய்தவர்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயலாற்றிய போது, கட்சியின் சர்வதேசத்துறை தலைவராகவும் பணியாற்றினார் யெச்சூரி. அந்தக் காலக்கட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுடன் மிக நெருக்கமான உறவை பேணியவர். உலக கம்யூனிஸ்ட் தலைவர்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவர். உலக அளவில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முதன்மையான எதிரிகளில் ஒருவராக முழங்கியவர். அந்த வகையில் உலக கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி.

இந்திய அரசியலில் மிகச்சிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராக கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்திச் சென்ற சீத்தாராம் யெச்சூரி ஓர் அற்புதமான எழுத்தாளர். ஒரு மகத்தான கலை இலக்கியவாதி. ஏராளமான நூல்கள், எண்ணிலா கட்டுரைகள் படைத்தவர், இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் மாதம் இருமுறை அரசியல் விமர்சனக் கட்டுரைகளை நீண்டகாலமாக எழுதி வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக 20 ஆண்டுகாலம் செயல்பட்டவர்.

நாடாளுமன்றத்திலும் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்கு இந்திய அரசியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

2005 ஜூலையில் மேற்குவங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட சீத்தாராம் யெச்சூரி 12 ஆண்டுகள் அப்பொறுப்பில் மிகச்சிறந்த பணியாற்றினார். தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகவும் மிளிர்ந்தார். அவரது நாடாளுமன்ற உரைகள் என்றென்றும் இந்திய அரசியலுக்கும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கின்றன.

Also Read: ”சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!