Politics

CPIM பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி காலமானார் : அவரின் அரசியல் பயணம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுசெயலாளராக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி கடந்த வாரம் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், சிகிச்சை பலனின்று சீத்தாராம் யெச்சூரி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் படித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் பயின்ற அவர் 12 ஆம் வகுப்பில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

பின்னர் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ படிப்பை முடித்த யெச்சூரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். மாணவர் பருவத்திலேயே அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

indira gandhi and yechury in emergency period

1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் (SFI ) இணைந்த சீதாராம் யெச்சூரி, 1978-ல் இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய இணைச் செயலாளராகவும், தொடர்ந்து அவ்வமைப்பின் தேசிய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே 1975-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், 1984-ம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உருப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1992-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உருப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்திலிருந்து 2005 ஆம் ஆண்டு முதல்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான சீத்தாராம் யெச்சூரி 2017 வரை அப்பதவியை வகித்தார். மேலும் 2015-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து மூன்று முறை இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் என பன்முகத் திறமை கொண்ட சீத்தாராம் யெச்சூரி ஏராள்மான புத்தகங்களையும் எழுதியுள்ளார். சீத்தாராம் யெச்சூரியின் மரணத்துக்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”GST வரி விதிப்பால் Computer கூட திணறுகிறது” - நிர்மலா சீதாராமன் முன்னர் தொழிலதிபர் பகிரங்க விமர்சனம் !