Politics

”GST வரி விதிப்பால் Computer கூட திணறுகிறது” - நிர்மலா சீதாராமன் முன்னர் தொழிலதிபர் பகிரங்க விமர்சனம் !

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் அதிக அளவிலான ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையிலேயே தொழிலதிபர் ஒருவர் விமர்சித்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவையில் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ” உங்கள் அருகில் உள்ள எம்.எல்.ஏ வானதி எங்கள் உண்வகத்தின் ரெகுலர் கஸ்டமர். அவர் வரும்போது எல்லாம் இனிப்பு, காரத்துக்கு தனி தனி ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்காக எங்களிடம் தினமும் சண்டை போடுகிறார்.

இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி என்றால், கார வகை உணவுகளுக்கு 12 % ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதே பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜி.எஸ்.டி ஆகிவிடுகிறது. மக்கள் பன், க்ரீமை தனி தனியாக கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்கள்.

வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜி.எஸ்.டியும் நிர்ணயித்துள்ளதாக எம்.எல்.ஏ வானதியே கூறுகிறார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள். எனவே ஜி.எஸ்.டி வரியை முறைபடுத்த வேண்டும்” என்று கூறினார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் : நிதி பகிர்வை 50 % அதிகரிக்க பினராயி விஜயன் கோரிக்கை!