Politics
தேர்தல் 2024: “எனது மகள், மருமகனை ஆற்றில் தூக்கி வீசுங்கள்...” - மகாராஷ்டிரா அமைச்சர் பேச்சால் சர்ச்சை !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்களுக்கு கேடான பல விஷயங்களை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவி, மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலங்களின் ஆளுங்கட்சி, ஆதரவு கட்சிகள் போன்றவற்றின் முக்கிய தலைவர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி, பாஜகவின் பக்கம் இழுத்து வருகிறது பாஜக.
அதில் முக்கியமான ஒன்றுதான் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சியை பாஜக ஆதரவோடு மிரட்டி கலைக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி இரண்டாக பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக ஆதரவோடு ஆட்சியில் உள்ளது. அதே போல் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் இரண்டாக பிரிக்கப்பட்டு, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஷிண்டேவுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதையடுத்து பாஜகவுக்கு எதிராக திரண்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம் கண்டது. இதில் மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட இந்தியா கூட்டணி காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 30 தொகுதிகளை கைப்பற்றியது.
நடந்து முடிந்த தேர்தலில் இந்தியா கூட்டணியின் அபார வெற்றியையடுத்து பலரும் கட்சி மாறி வருகின்றனர். குறிப்பாக பாஜகவில் இருந்து பலரும் எதிர்க்கட்சிகளுக்கு மாறத்துவங்கியுள்ளனர். அந்த வகையில் ஷிண்டே மீதும், அஜித் பவார் மீதும் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியும் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஷிண்டே கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியை சேர்ந்த அமைச்சர் தர்மராவ் பாபாவின் (Dharamrao Baba Atram) மகள் பாக்யஸ்ரீ மற்றும் மருமகன் ரிதுராஜ் ஆகியோர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட இந்தியா கூட்டணிகள் ஒன்றாக களம் காண்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கட்சிரோலியில் அஹ்ரி தொகுதி தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் தர்மராவ் பாபாவின் மகள் பாக்யஸ்ரீ மற்றும் மருமகன் ரிதுராஜ் ஆகியோர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து, தனது மகள் மற்றும் மருமகனை ஆற்றில் தூக்கி வீசுமாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் தர்மராவ் பாபா.
அதாவது மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், கட்சிரோலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரது முன்னிலையில் பேசிய தர்மராவ் பாபா, "மக்கள் கட்சியை விட்டு செல்லலாம். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நமது குடும்பத்தை சேர்ந்த சிலர் எனது அரசியல் பலத்தை பயன்படுத்தி வேறு கட்சியில் சேர விரும்புகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக மகாராஷ்டிரா அரசியலில் கட்சியை உடைப்பதில் மக்கள் திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
சரத் பவார் குரூப் தலைவர்கள் எனது குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தி எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகின்றனர். எனது மகள் மற்றும் மருமகனை நம்பாதீர்கள். கட்சிக்கு துரோகம் செய்த அவர்களை பிராணஹிதா (Pranahita river) ஆற்றில் தூக்கிப்போடுங்கள். என்னை விட்டு மக்கள் செல்லலாம். அப்படி செல்லும் ஒவ்வொருவரையும் ஆற்றில் தூக்கிப்போடவேண்டும். எனது மகளை அவர்கள் பக்கம் இழுத்துச்சென்று எனக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.
ஒரு தந்தைக்கு மகளாக இருக்க முடியாத ஒருவரால் எப்படி உங்களுக்கு நம்பிக்கையாக இருக்க முடியும். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவர் உங்களுக்கு என்ன நீதி வழங்குவார். அவரை நம்பாதீர்கள். அரசியலில் எனது மகள், சகோதரர் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். ஒரு மகள் என்னை கைவிட்டாலும் இன்னொரு மகள் இருக்கிறாள். ஒட்டுமொத்த குடும்பமும் எனக்கு பின்னால் இருக்கிறது'' என்றார்.
சொந்த மகள் மற்றும் மருமகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தர்மராவ் பாபாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
ஒரு நாள் தாமதம் கூட, அடிப்படை உரிமைக்கு எதிரானது தான்! : பிணை வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!
-
பா.ஜ.க நிர்வாகி வீட்டில் CBCID போலிஸார் திடீர் சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
-
கோவிட் முறைகேடு புகார்! : பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர பரிந்துரை!
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை : 17 வீடுகளுக்கு தீ வைப்பு - பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை!
-
சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!