Politics

SEBI தலைவர் மாதபி புச் மீது புகார் தெரிவித்த SEBI ஊழியர்கள்... நிதியமைச்சகத்துக்கு கடிதம் !

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.

இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து SEBI அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI விசாரணையே போதுமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே அதானி ஊழலில் SEBI தலைவர் மாதபி புச்க்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் SEBI அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மாதபி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார் என்றும், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், SEBI தலைவர் மாதபி புச் மீது SEBI ஊழியர்களே புகார்களை முன்வைத்து நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். SEBI அமைப்பின் கிரேடு ஏ மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள ஏராளமான அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து இந்த புகார்களை அனுப்பியுள்ளனர்.

அதில், பொது இடத்தில் அவமானப்படுத்துவதும் வகையில் கத்துவதும் ,திட்டுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற செயல்களில் மாதபி புச் ஈடுபடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எட்டமுடியாத இலக்குகளை நிர்ணயித்து, பின்னர் இலக்குகளையும் மாற்றிவிடுவதால் ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2-3 ஆண்டுகளாக SEBI அமைப்பில் பயத்தில் ஊழியர்களை அச்சுறுத்தி வேலை நடக்கிறது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நடைபெறும் நிர்வாகம் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. SEBI அமைப்பின் ஊழியர்களே இவ்வாறு புகார் தெரிவித்துள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "பதக்கம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசின் ஊக்கமே காரணம்" - Paralympic பதக்கம் வென்ற வீராங்கனைகள் நெகிழ்ச்சி!