Politics

எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் மர்ம மரணம் : களத்தில் இறங்கிய மாநில மகளிர் ஆணையம் !

தென்மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இங்கு பாஜகவை வளர்த்ததில் எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அங்கு பாஜக சார்பில் 4 முறை முதலமைச்சராக எடியூரப்பா இருந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் ஒதுக்கி தள்ளியது. இதனால் தனி கட்சி ஆரம்பித்த அவர் பின்னர், தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இதன் காரணமாக பாஜகவில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். எடியூரப்பாவின் இரு மகன்களும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது சதாசிவ நகர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nagalakshmi bai

இதனிடையே எடியூரப்பா மீது புகைரளித பெண் கடந்த மே 27ம் தேதி பெங்களூரு ஹுளிமாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் உயிரிழந்தது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி, "எடியூரப்பா மீது புகார் அளித்த பெண்நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி திடீரென இறக்க முடியும்? என இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் உள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனவே அப்பெண்ணின் மரணம் குறித்தும், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளேன்"என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: "வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல" - பாஜக அரசின் புல்டோசர் நடவடிக்கை : உச்சநீதிமன்றம் கண்டனம் !