Politics
பா.ஜ.க.வின் புல்டோசர் அரசுகளை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம் : பொய் குற்றச்சாட்டால் வீடு இழந்த பலர்!
பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேத்தில் தொடங்கிய புல்டோசர் முறை, பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களிலும் பின் தொடரப்படுகின்றன.
புல்டோசர் முறை என்பது, சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்படுபவர்களின் வீடுகளை அரசே தரைமட்டமாக்கும் முறை. இம்முறைக்கு, சான்று பெறாத வீடுகள் என்ற சாக்குகளும் உள்ளன.
அவ்வாறு, கடந்த ஆண்டு பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் அத்னான் மன்சூரி என்ற 18 வயது இளைஞர், அவரது வீட்டின் மாடியில் நின்று இந்து சமய ஊர்வலத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில், “ஊர்வலத்தை நோக்கி எச்சில் துப்பினார்” என்று குரல் எழுப்பப்பட்ட ஒரே காரணத்திற்காக அந்த இளைஞரின் வீடு இடிக்கப்பட்டு, 5 மாத சிறை தண்டனை அவர் அனுபவிக்க நேர்ந்துள்ளது.
5 மாத சிறை தண்டனைக்கு பின், விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், வழக்கு கொடுத்தவர், “இது அந்த இளைஞர் அல்ல. இவர் யாரென்று எனக்கு தெரியாது” என தெரிவித்தார்.
எவ்வித காணொளி ஆதாரமும், சாட்சியங்களும் இல்லாத போதும் சிறுபான்மையினர் என்பதாலேயே, அவரின் வீடு இடிக்கப்பட்டு அவரது குடும்பமே சாலையில் தள்ளப்பட்டது. இந்நிலையில் வீடு இடிப்பிற்கு அரசு நிவாரணம் தந்ததா? என்றால் இல்லை. மன்னிப்பு கோரியதா என்றால் இல்லை!
காரணம், அரசின் எண்ணமும், இந்துத்துவவாதிகளின் எண்ணமும், அப்போதைய அளவில் சிறுபான்மையினருக்கு மாடி இருந்தால் தானே வேடிக்கை பார்ப்பார்கள் என்றால் என்ற கசப்பு வீடே இல்லை என்றதும் தீர்ந்தது என்பதாக இருந்தது தான்.
இது தொடர்பாக, அத்னானின் தந்தை அஸ்ரஃப் NDTV க்கு கொடுத்துள்ள பேட்டியில், “நடந்த நிகழ்வை பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மகன் திரும்ப வந்ததே போதுமானது. எப்படியாவது வாழ்க்கையை நடத்திக்கொள்கிறோம்,” என்று அச்சத்துடன் தெரிவித்தார்.
இதே நிலை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறி வருகிறது. சொந்த வீடுகள் தான் இடிக்கப்படுகிறது என்று இல்லை, சிறுபான்மையினர்களின் மத ஆலயங்களும் இடிக்கப்படுகின்றன.
அதற்கான எடுத்துக்காட்டு தான் உத்தராகண்டின் அல்துவானி சம்பவம். உத்தராகண்டிலும் பா.ஜ.க ஆட்சி தான்.
கடந்த பிப்ரவரி மாதம், உத்தராகண்ட் மாநிலத்தின் ‘அல்துவானி’ என்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி ஒரு வணிகப்பகுதியில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்துவந்த மசூதி மற்றும் இஸ்லாமிய கல்விச்சாலை அமைந்துள்ள இடம் அரசிற்கு உரிமையானது என எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் அவ்விடங்களை இடிக்க முற்பட்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கைமாற்றப்பட்ட அவ்விடத்திற்கு எழுத்துருவில் ஆதாரம் இல்லை என்பதனை தெரிந்துகொண்டு, சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு, இஸ்லாமிய புனித இடங்களை கைப்பற்ற எண்ணிய பா.ஜ.க அரசின் நோக்கத்தை உணர்ந்த அல்துவானி மக்கள், மசூதி மற்றும் கல்விச்சாலையை இடிக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
எனினும், அதனை காதில் போட்டுகொள்ளாத அதிகாரிகள் இடிப்பு வேலையை தொடர்ந்தனர். இடைமறித்தவர்களை அருகில் இருந்த காவலர்கள் தடியடி நடத்தியும், பின்பு துப்பாக்கிச்சூடு நடத்தியும் விரட்டி அடித்தனர். எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், வீட்டில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை.
இதனையடுத்து, வன்முறைக்கு மக்கள் தான் காரணம் என சுமார் 42 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறை தாக்குதலில் 5 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு மேல் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அல்துவானி பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “பல ஆண்டு குடியிருந்த வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “புல்டோசர் பயன்படுத்தும் விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் விதமாக நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும்” என்றும் தெரிவித்தனர்.
Also Read
-
தீபாவளி... 108 அவசார கால மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு !
-
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை : சென்னையில் மோசமடைந்த காற்று மாசு !
-
வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!