Politics

செபி விவகாரம் : ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி-அமித் ஷா தப்பமுடியாது : மல்லிகார்ஜுன கார்கே !

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.

இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து SEBI அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI விசாரணையே போதுமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே அதானி ஊழலில் SEBI தலைவர் மாதபி புச்க்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் செபி அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மாதபி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார் என்றும், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், "நீண்ட காலமாகத் தன்னாட்சியுடனும் சுதந்திரமாகவும் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்களை பாஜக நசுக்கி வருகிறது. சி.பி.ஐ, அமலாக்கத் துறை, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியவற்றின் தலைவர்கள் நியமனங்கள் வரிசையில் செபியும் இணைந்துள்ளது.

செபி தலைவரை பாஜகவின் விருப்பப்படி நியமித்தது அந்த அமைப்பின் பெயருக்கு கறையை ஏற்படுத்தியுள்ளது. செபியின் நேர்மையையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு செபி தலைவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். நரேந்திர செபி தலைவர் மோடி - அமித் ஷா தலைமையிலான குழுவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், இந்த புதிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் தப்ப முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் மர்ம மரணம் : களத்தில் இறங்கிய மாநில மகளிர் ஆணையம் !