Politics

சாவர்க்கரின் மன்னிப்புக் கடிதங்களை மெய்ப்பித்த மாபெரும் சட்டமேதை ஏ.ஜி. நூரானி : முரசொலி !

முரசொலி தலையங்கம் (02-09-2024 )

ஏ.ஜி.நூரானி விட்டுச்சென்றவை :

நம்காலத்தில் வாழ்ந்த மாபெரும் சட்டமேதை ஏ.ஜி.நூரானி - – 94 வயதில் கடந்த ஆக.29 ஆம் தேதி காலமானார். அவர் இடத்தில் வைத்து போற்றத்தக்க ஆளுமைகள் மிகமிகக் குறைவு என்ற வகையில் அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.

மும்பையில் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் பிறந்தவர் அப்துல் கஃபூர் மஜீத் நூரானி அவர்கள். மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். மும்பை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய வற்றில் புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதுவல்ல அவரது பெருமை. தான் வாழ்ந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு வெளியே, நீதிக்காகக் குரல் கொடுத்தார். முதுமையின் காரணமாக மூத்த வழக்கறிஞராகப் போற்றப்பட்டவரல்ல இவர். தனது துணிச்சலின் காரணமாகப் போற்றப்படுபவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதிகள் குறித்து விசாரித்த ஜெயின் ஆணையம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், தமிழர்களையும், திராவிட இயக்கங்களையும் குற்றம் சாட்டியபோது ‘இது எவ்வளவு மோசடித்தனமான குற்றச்சாட்டு’ என்பதைக் கண்டித்து எழுதிய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் ஏ.ஜி.நூரானி.

அவசர நிலைச் சட்டம் 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார். இப்போது, ‘டெல்லி சென்ட்ரல் விஸ்டா’ சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் கடுமையாக எதிர்த்தார். காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். காஷ்மீருக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகமது அப்துல்லா சிறையில் இருந்தபோது, 1962 ஆம் ஆண்டு அவரைச் சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தார். ‘காஷ்மீர் விவகாரம் -– 1947- – 2012’ என்ற நூலையும், ‘சட்டப்பிரிவு 370- ஜம்மு காஷ்மீரின் அரசமைப்பு வரலாறு’ என்ற நூல்களையும் எழுதினார்.

தனது கருத்துகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மேன், ஹிந்துஸ்தான் டைம்ஸ்,பிரண்ட்லைன், எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி,டைனிக் பாஸ்கர் ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். மாவீரன் பகத்சிங் வழக்கின் விசாரணை குறித்த இவரது நூல் மிகப் புகழ்பெற்றது ஆகும்.

ஏ.ஜி.நூரானியின் அறிவுக்கூர்மைக்கும் அஞ்சாமைக்கும் உதாரணங்கள், இந்தியாவில் அடிப்படைவாத அரசியலுக்கு எதிரான அவரது அழுத்தமான குரல் ஆகும். சாவர்க்கரும் இந்துத்துவமும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் பி.ஜே.பி.யும் – வேலைப் பிரிவினை, இஸ்லாமும் ஜிகாத்தும், ஆர்.எஸ்.எஸ். – இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் ஆகிய நான்கு நூல்களும் குறிப்பிடத்தக்கவை. இந்திய அரசியலுக்கு அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் இவைதான்.

பா.ஜ.க. தனது வழிகாட்டியாகவும், மாபெரும் தலைவராகவும் கருதும் சாவர்க்கர், பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்தான் என்பதை ஆவணங்களின் மூலமாக மெய்ப்பித்தவர் நூரானி.

“இந்திய தேசியவாதக் கோட்பாட்டுக்கு எதிராக சாவர்க்கர், அவரையே நிறுத்திப் போராடி இருக்கிறார். பிராந்திய தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாத அவர் பண்பாட்டு தேசியத்துக்காக வாதாடி இருக்கிறார். சாவர்க்கரை தேசிய நாயகனாக பி.ஜே.பி. முன்னிறுத்துவதற்குக் காரணம், இந்தியத் தேசியத்தின் அடையாளமாக உள்ள காந்தியை அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான். சாவர்க்கர் பலமுறை ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டிருந்தும், காங்கிரசுக்கு எதிராக ஆங்கில ஆட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டிருந்தும் அவரை தேசிய நாயகனாக முன்னிறுத்த பி.ஜே.பி.முயல்கிறது. ஆவணக் காப்பகங்களிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு ஆவணமும் அவர் மீது மோசமான ஒளியையே பாய்ச்சுகிறது”என்ற முன்னுரையோடு ‘சாவர்க்கரும் இந்துத்துவமும் - – மகாத்மா காந்தியின் படுகொலையும்’ என்ற நூல் 2002 ஆம் ஆண்டு வெளியானது. (தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது)

முரளிமனோகர் ஜோஷி அமைச்சராக இருந்தபோது தனது கட்டுப்பாட்டில் இருந்த ICHR அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டு வந்த சுதந்திரப் போராட்ட நூல் வரிசை நூல்களை தடை செய்ததற்குக் காரணம், இது போன்ற உண்மைகள் வெளியில் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் நூரானி எழுதினார். 1911 ஆம் ஆண்டும், 1913 ஆம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதங்களை ஆவணக் காப்பகங்களில் இருந்து நூரானி எடுத்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு 1924 ஆம் ஆண்டு சாவர்க்கர் கொடுத்த உறுதிமொழியையும் எடுத்தார்.

‘ஆர்.எஸ்.எஸ். - – இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற அவரது நூலை பிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ( 824 பக்கங்கள், பாரதி புத்தகாலயம் வெளியீடு) ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்ட 1925 முதல் இன்று வரையிலான அந்த அமைப்பு குறித்த ஆய்வு நூல் இது. அந்த அமைப்பு மத நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்று அந்நூலில் நூரானி குறிப்பிட்டுள்ளார். அந்த அமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது, சுதந்திரம் பெற்ற நேரத்தில் எப்படி நடந்து கொண்டது, காந்தியார் படுகொலையின் போது தடை செய்யப்பட்டது... இன்ன பிற வரலாறுகளின் ஆதாரப்பூர்வத் தொகுப்பே இந்நூல்.

இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதையும், இந்த தேசம் கட்டியமைக்க நினைத்த இந்தியாவுக்கே அபாயம் ஏற்பட்டிருப்பதையும் தொடர்ந்து சுட்டிக் காட்டி எழுதிய ஏ.ஜி.நூரானி, “இந்தியா தனது இதயத்தைக் காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தட்டும்” என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துவதே நூரானிக்குச் செலுத்தும் அஞ்சலி.