Politics

யோகி ஆதித்யநாத்தின் மற்றொரு வடிவம் ஹிமாந்தா - தரம் தாழ்ந்த அரசியலால் புகழ் தேடுகிறார்! : தேஜஸ்வி கண்டனம்!

உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசிற்கு அடுத்து, சிறுபான்மையினர் எதிர்ப்பை அதிக அளவில் உமிழும் அரசாக அசாம் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது.

தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) என்கிற பெயரில், சுமார் 19 இலட்சம் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்பட்டதும் அசாம் மாநிலத்தில் தான். பொது உரிமையியல் சட்டம் (UCC) அமல்படுத்தலை தீவிரப்படுத்தி வருவதும் அசாம் மாநிலம் தான்.

இதனால், அசாம் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு இருந்து வந்த உரிமைகள் பல, பா.ஜ.க.வின் ஆட்சிக்கு பின் பெருமளவில் பறிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு சிறுபான்மையினர் உரிமை பறிப்பை நிகழ்த்தி இருக்கிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா.

அசாம் மாநிலத்தில் சாதுலாவின் முஸ்லீம் லீக் ஆட்சியின் போது, சட்டப்பேரவை நடக்கும் காலங்களில் வெள்ளிக்கிழமை சுமார் 2 மணிநேரம் தொழுகைக்காக நேரம் ஒதுக்கவேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டது.

இதனால், மத நம்பிக்கைக்கு கேடு விளைவிக்காத வண்ணம், சட்டப்பேரவை உறிப்பினர்கள் சட்டப்பேரவையில் ஒதுக்கப்படும் நேரத்தில் தொழுகை மேற்கொண்டு வந்தனர். இந்நடைமுறைக்கு தான் தற்போது தடை விதித்திருக்கிறார் ஹிமாந்தா சர்மா. இதனால், அசாமில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி, “அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா, யோகி ஆதித்யநாத்தின் மற்றொரு வடிவம். தரம் தாழ்ந்த அரசியலால், எப்போதும் செய்தியில் இடம்பெற்றுவிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்தியா என்பது அனைத்து மக்களுக்கானதும் தான்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் திமுக முப்பெரும் விழா: பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருது பெறுவோர் விவரம்!