Politics
உழவர்களுக்கு இரும்பு வேலிகள் - அதானிக்கு சிவப்பு கம்பளம் : மோடி ஆட்சியில் சொத்தை அள்ளிக்குவித்த அதானி!
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றியத்தில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால், குறைந்த ஆதரவு விலைக்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோவதும், வியர்வை சிந்தாமல் லட்சக்கணக்கான கோடிகள் பெற்று சிலர் செழிப்பதுமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இங்கு உயிர் போகும் இடத்தில், மக்களுக்கு வயிறார உணவு உருவாக முக்கிய காரணமாய் விளங்கும் உழவர்களும், பணத்தில் செழிக்கும் இடத்தில் மோடி அரசின் முதலாளி நண்பர்களும் இருக்கின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக, 2020ஆம் ஆண்டு உழவர்களின் பொருளியலை கேள்விக்குறியாக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் முன்மொழிவும், அதற்கு எதிரான போராட்டக்களத்தில் நூற்றுக்கணக்கான உழவர்களின் உயிரிழப்பும் அமைந்துள்ளது.
சுமார் ஓராண்டு காலம் சாலையில் தொய்வின்றி போராடியதால், 2020-ல் முன்மொழியப்பட்ட வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டாலும், இன்றளவும் உழவர்களுக்கு முறையே வழங்கப்பட வேண்டிய குறைந்த ஆதரவு விலை (MSP) கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதற்காக உழவர்களின் போராட்டமும் தொடர்ந்து தான் வருகிறது.
இது வேளாண் துறையில் மட்டுமா என்றால், அதுவும் இல்லை. நூறு நாள் வேலை திட்டத்திலும் சரி, வேலையில்லா திண்டாட்டத்திலும் சரி, மக்கள் அடிப்படை வருவாய் இன்றி ஒரு நேர உணவிற்கு அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற ஆட்சி நடக்கும் வேளையில் தான், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரை உலக அரங்கிற்கு வெளிக்காட்டியுள்ளது Hurun India நிறுவனம்.
அதன்படி, Hurun India நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, 11.61 இலட்சம் கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், அவருக்கு அடுத்தப்படியாக 10.14 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் அம்பானி இரண்டாம் மிகப்பெரிய பணக்காரராகவும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருமே பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அம்பானி வீட்டு திருமணம் என்றால், உள்நாட்டு விமான நிலையம், 10 நாட்களுக்கு பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்படும். நெரிசல் மிகுந்த நகரமாக கருதப்படும் மும்பை மாநகரில் போக்குவரத்து அம்பானி வீட்டு பேச்சு கேட்டு மாற்றி அமைக்கப்படும் என்பதும் அண்மை நிகழ்வுகள் வெளிப்படுத்தியதாக அமைந்துள்ளன.
அதானி என்றால் அம்பானிக்கு ஒரு படி மேல். இந்திய அரசின் உடைமைகள், அதாவது பொதுமக்களின் உடைமைகளாக கருதப்படும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், கனிம சுரண்டல்கள் என அனைத்தும் அதானியின் வசம் தான்.
இவ்வடிப்படையில், அரசியல் தலைவர்களுக்கே இல்லாத பல உரிமைகள் அதானி, அம்பானி இருவருக்கும் உண்டு. குறிப்பாக அதானிக்கு உண்டு.
இதனால், 2020 - 24க்கு இடைப்பட்ட காலத்தில், 1.4 இலட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, சுமார் 10.21 இலட்சம் கோடி உயர்ந்து 11.61 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2020-ல் 6.58 இலட்சம் கோடியாக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு, 2024-ல் 10.14 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு ஒன்றிய பா.ஜ.க வகுத்துத்தந்த வழிகள் ஏராளம்.
இத்தகைய வழிகளை முதலாளிகளுக்கு பா.ஜ.க அமைத்துத்தர காரணம், மறைமுகமான கையூட்டு (Bribery). அதன் வெளிப்பாடாகவே, அண்மையில் நீக்கப்பட்ட தேர்தல் பத்திரம் (Electoral Bond) முறை அமைந்தது. இதனிடையே, பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து, அக்கடனை திரும்பப்பெருவதற்கு வங்கிகளில் “குறைந்த வைப்புத் தொகை இல்லை” (Minimum Balance) என உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்படும் அபராதம் என்ற சுரண்டலும், சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையானது.
இது போன்ற முதலாளித்துவ நடவடிக்கைகள் மக்கள் கண் பட நடந்து கொண்டிருப்பது, ஒன்றியத்தில் ஆட்சி செய்கிற பா.ஜ.க மீது மக்கள் கடுமையான சினம் கொள்ள உந்துதலாக அமைந்துள்ளது.
அதன் வெளிப்பாடாக, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும், பா.ஜ.க.வின் முதலாளித்துவ நடவடிக்கைகளுக்கு கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!