Politics

“வன்கொடுமை குறித்து தேசிய அளவில் திறனாய்வு வேண்டும்!” : குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

இந்தியாவின் அரசியலமைப்பை பொறுத்தவரை, நாட்டின் மிக உயர்ந்த பதவியாக குடியரசுத் தலைவர் பதவி இருந்தாலும், நடைமுறையில் அதிக அதிகாரம் படைத்தவராக பிரதமரே இருக்கிறார்.

இந்நடவடிக்கை, கடந்த காலங்களில் பெருமளவில் வெளிப்படாவிட்டாலும், 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தெள்ளத்தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மிக பாதுகாப்பான கட்டடம், அரசியலமைப்பை பேணிக்காக்கிற கட்டடமான நாடாளுமன்றம், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டபோதும்; ஒன்றிய பா.ஜ.க அரசின் உந்துதலால் தேசிய விழாவாக ராமர் கோவில் திறப்பு விழா முன்னெடுக்கப்பட்ட போதும், இந்தியாவின் முதல் குடிமகள் என்கிற முறையில் இயல்பாக தரப்பட்டிருக்க வேண்டிய அழைப்பு, நடப்பு குடியரசுத் தலைவரான திரெளப்தி முர்முவிற்கு மறுக்கப்பட்டதே குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.

எனினும், அதிகாரம் குறித்து சற்றும் கவலை கொள்ளாதவாறும், இது தனக்கு பழக்கப்பட்டது தான் என்றவாறும், பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான திரெளபதி முர்முவின் நடைமுறையும் அமைந்தது.

இந்நிலையில், நாட்டின் பல சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பாத குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தற்போது கொல்கத்தா வன்கொடுமை கொலை விவகாரம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் கொல்கத்தா வன்கொடுமை நிகழ்வு தனக்கு மன வருத்தம் தருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து சிலர், மணிப்பூரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிய போதும், அவமானப்படுத்தப்பட்ட போதும், இதர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அநீதி வலுத்த போதும் குரல் கொடுக்க உரிமை இல்லாதவர் போல இருந்ததற்கு, குற்றங்கள் நடந்த மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்திருந்ததும் முக்கிய காரணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தற்போது குடியரசுத் தலைவர் பாலியல் வன்கொடுமை குறித்து வருத்தம் தெரிவித்த நிலையில், தேசிய அளவில் இச்சிக்கல் உள்ளது, அவ்வனைத்தை குறித்தும் குடியரசுத் தலைவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இடையே நெட்டிசன்கள் பலர், “அதிகாரம் படைத்தவர்களாக இருப்பவர்களே வருத்தம் தெரிவிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, உடனடியான வன்முறை தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்” என தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, “குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் வருந்துவது போல பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கொல்கத்தாவில் மட்டும் நடைபெறவில்லை, மகாராஷ்டிரத்திலும் நடக்கிறது. அது குறித்தும் குடியரசுத் தலைவர் கருத்து தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தேசியத்திற்கும் நீங்கள் தான் குடியரசுத் தலைவர்” என செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!