Politics

"மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி நெருக்கடியை உருவாக்குகிறது" - அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம் !

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கிறது.

ஆனால் ஒன்றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) விதிகளை ஏற்காததால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் மட்டுமே நிதி தருவதாக கூறுவது மாணவர்களுக்கு செய்யும் ஓரவஞ்சனை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் "தேசிய கல்வி கொள்கையை காரணத்தை காட்டி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2152 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை 2 முறை சந்தித்தபோதும், தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் மட்டுமே நிலுவை தொகையை தருவதாக கூறுகிறார்கள். இது வேதனையாக உள்ளது.

கல்வியில் அரசியல் பார்க்க வேண்டாம். தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் மட்டுமே நிதி தருவதாக கூறுவது மாணவர்களுக்கு செய்யும் ஓரவஞ்சனை. மும்மொழி கொள்கையை புகுந்த நினைக்கிறார்கள். மொழி கொள்கையில் கை வைப்பது தேன்கூட்டில் கைப்பது போன்றது.ஒன்றிய அரசு தற்போது கல்வித்துறையிலும் கை வைக்க துவங்கி விட்டது. மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி நெருக்கடியை உருவாக்குகிறது. எனினும் அதனை முதலமைச்சர் சமாளிப்பார்"என்று கூறியுள்ளார்.

Also Read: "கொரோனாவால் மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதம்" - ஒன்றிய அரசின் பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் !