Politics
பாஜகவின் சட்டங்களை எதிர்க்கும் நிதிஷ், சந்திரபாபு... குழப்பத்தில் பாஜக கூட்டணி - முரசொலி தலையங்கம் !
முரசொலி தலையங்கம் (28.08.2024)
குழப்பத்தில் பா.ஜ.க. கூட்டணி!
இம்முறை ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை பா.ஜ.க. பெறவில்லை. சில கட்சிகளின் ஆதரவுடன்தான் பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடி உட்கார்ந்திருக்கிறார். இந்தக் கட்சிகள், மோடி சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் கட்சிகளா, ஏற்றுக் கொள்ளும் கட்சிகளா என்றால் அதுவும் இல்லை. பா.ஜ.க.வின் எண்ணங்களுக்கு எதிரான கட்சிகளாக, அதனை எதிர்க்கும் கட்சிகளாக இவை அமைந்துள்ளன.
இத்தகைய 'கொள்கை எதிரிகள்' தயவில்தான் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நரேந்திரமோடி. 'சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்ற கொள்கையானது கோரிக்கையாக இந்திய நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணிக் கட்சியின் கோரிக்கையாக மட்டுமல்ல, பெரும்பான்மைக் கட்சிகளின் கோரிக்கையாக அது மாறிவிட்டது. "சாதி வாரிக் கணக்கெடுப்பை தடுத்து நிறுத்தலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. விரைவில் 90 விழுக்காடு இந்தியர்கள் சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரித்து போராடுவார்கள். தற்போதைய ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு உத்தரவிடாவிட்டால், அடுத்த பிரதமர் அதைச் செய்வதை நரேந்திரமோடி பார்க்க நேரிடும்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். இது பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளையும் அசைத்துப் பார்த்துள்ளது.
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. "நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்" என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் பிரதமர் மோடி அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக இருப்பவருமான சிராக் பஸ்வான் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக அவர் இருக்கிறார். "அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பல்வேறு பிரிவினரை அடிப்படையாகக் கொண்டது. அரசின் திட்டங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம்" என்று சிராக் பஸ்வான் சொல்லி இருக்கிறார். "நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்பதில் லோக் ஜனசக்தி கட்சி உறுதியாக உள்ளது. மக்களை முன்னேற்ற சாதி அடிப்படையிலான மக்கள் தொகை விபரம் அரசுக்குத் தேவை" என்பதை வலியுறுத்தி வருகிறார் சிராக் பஸ்வான்.
இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதியை ஒழிக்கும் வகையில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு புகுத்தப் பார்த்தது. தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அதனை திரும்பப் பெற்றது பா.ஜ.க. அரசு. அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தியும் இதனை எதிர்த்தது. 'இது எனக்கு மிகுந்த கவலை தருகிறது' என்று சிராக் பஸ்வான் சொல்லி இருந்தார். கூட்டணிக் கட்சிகளே எதிர்த்த நிலையில் வேறு வழியில்லாமல் பின் வாங்கியது பா.ஜ.க.. வக்ஃப் சட்டத்தையும் சிராக் பஸ்வான் எதிர்த்து விட்டார். வக்ஃப் வாரியச் சட்டத்திலும் இதே நிலைமைதான். வக்ஃப் வாரியச் சட்டம் – 1995 என்ற பெயரை ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் - 1995 என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவின் படி வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாற்றப்படுகிறது. அந்தச் சட்டத்தின் 40 ஆவது பிரிவு நீக்கப்படுகிறது. மத்திய வக்ஃப் கவுன்சில் என்பதை உருவாக்குகிறார்கள். அதில் முஸ்லீம்கள் மட்டுமல்ல, முஸ்லீம் அல்லாதவர்களும் இருப்பார்கள். வக்ஃப் வாரிய நிலங்களை கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். வக்ஃப் நிலமா இல்லையா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்களாம்.
சிறுபான்மைச் சமூகத்தினர் அவர்களின் சொத்துகளை நிர்வகிக்க அரசமைப்புச் சட்டம் பிரிவு 30 அதிகாரம் தருகிறது. அதையே பறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்கும் சட்டவிரோத சட்டம் இது. இதனை 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்த்து வருகிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மோடியின் நாற்காலியைக் காப்பாற்றுவதில் முக்கியமான இருவரில் ஒருவரான ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிலேயே எதிர்ப்பை தெரிவித்து விட்டார். இருவரின் மற்றொருவரான நிதிஷ்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். 'இந்த சட்டம் இசுலாமியர்களுக்கு அச்சம் தருகிறது' என்று சொல்லி இருக்கிறார் நிதிஷ்குமார். பீகார் மாநிலத்தில் இசுலாமியர்கள் 18 விழுக்காடு இருக்கிறார்கள். நிதிஷ்குமார் ஏன் அச்சம் அடைகிறார் என்று தெரிகிறதா? நிதிஷ்குமாரின் கட்சி முதலில் வக்ஃப் சட்டத்தை ஆதரித்தது. அக்கட்சியின் எம்.பி.யான ராஜீவ் ரஞ்சன் நாடாளுமன்றத்திலேயே ஆதரித்து பேசினார். இது பீகார் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருக்கும் மொகத் ஜமா கான், சொந்தக் கட்சியையே எதிர்த்துவிட்டார். முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தினார். பீகார் நீர்வளத்துறை அமைச்சரான விஜயகுமார் சவுத்திரியும், வக்ஃப் சட்டத்தை எதிர்த்து கருத்து கூறினார். நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கைகோர்த்து விட்டார்கள். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜாவும், சிறுபான்மை நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கானும் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவைச் சந்தித்து தங்களது அச்சங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி குழப்பத்தின் உச்சத்தில் கிடக்கிறது ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!