Politics

இளைஞர்கள் நம் கழகத்தை தான் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்கு இதுதான் உதாரணம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை கலைவாணர் அரங்கில் திமுக பொறியாளர் அணி நடத்திய கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 'My Roots' என்ற மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பொறியாளர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பேச்சாளர்களுக்கு காசோலை வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் பாராட்டி பேசினார். அப்போது எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவில் மட்டுமல்ல.. உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சியை எந்த ஒரு இயக்கமும் இதுவரை நடத்தியதும் இல்லை இனி நடத்தப்போவதும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார். அதனை இங்கு குறிப்பிடுகிறேன்.

அந்த அளவிற்கு திமுக கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. அதற்கு வாழ்த்துகள். இதற்கு காரணம் நம்முடைய கழகத் தலைவர் முதல்வர் மட்டுமல்ல, கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள் தான் காரணம்.

கழக பொறியாளர் அணி நடத்திய பேச்சு போட்டியில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், கழக இளைஞரணி நடத்தும் “என் உயிரினும் மேலான” என்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுபோட்டியிலும் இதுவரை 17 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இன்றைய இளைஞர்கள் நம்முடன் வர தயாராக இருக்கிறார்கள் என்று இதன்மூலம் தெரிய வருகிறது.

பேச்சுப்போட்டியை பொறியாளர் அணி நடத்தியதற்கு ஒரு காரணம் உள்ளது. திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அவர்கள் அனைவருமே வார்த்தை பொறியாளர்கள். திமுகவில் மட்டும் தான் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பேச்சாளர்களாக இருக்கிறார்கள்.

உறுப்பினர், வேட்பாளர், சட்டப்பேரவை இப்படி தமிழுக்கு புது புது வார்த்தை தந்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா வைத்த தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற இன்று ஒரு கும்பல் முயற்சிக்கிறது. திமுக இருக்கும் வரை அது நடக்காது; நடக்கவும் விடமாட்டேம்.

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் திட்டத்திற்கு, 50% ஒன்றிய அரசும், 50% மாநில அரசும் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் கலைஞர். அவர் கோரிக்கை வைத்து 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் நிதியை முறையாக ஒன்றிய அரசு அளிப்பதில்லை. அதற்கு உதாரணம் தான் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம். இத்திட்டதிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனாலும் இந்த பணிகள் நிற்கக்கூடாது என்பதற்காக மாநில அரசின் நிதியில் மெட்ரோ பணிகளை தொடர்ந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று கூறினார்.