Politics

“மணிப்பூர் முதல்வரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்“ : மணிப்பூர் பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல்!

உலக அளவில் இஸ்ரேல் - காசா, ரசியா - உக்ரைன் நாடுகளிடையே மோதல்கள் நடைபெறும் சூழலில், உயிரிழப்புகள் இலட்சத்தை நெருங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அப்பாவி குழந்தைகளும், பெண்களும் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறையில், இந்தியாவிற்கும் விலக்கில்லை என்பதற்கு மணிப்பூர் கலவரம் ஓர் தவிர்க்கமுடியாத எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

மணிப்பூர் கலவரம் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை வந்தும், இயல்புநிலை மட்டும் எட்டாக்கனியாகியாகவே நீடிக்கிறது.

இதனால், மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்களாக இருக்கும் குகி சமூகத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, குகி சமூகத்தினரின் பிரதிநிதிகளாக விளங்கும் சுமார் 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள், “மணிப்பூரில் இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும். கலவரத்தை நின்று வேடிக்கை பார்த்தவரும், சொல்லப்போனால் கலவரத்திற்கு துணை நின்றவருமான பைரன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை விடுத்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 9 பேர் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். இதனால், வெளிக்கட்சிக்காரர்கள் அரசை விமர்ச்சிப்பதை அரசியல் ஆதாயம் என மழுப்பி வந்த பா.ஜ.க.வினர், தற்போது வாயடைத்து போயுள்ளனர்.

எனினும், பா.ஜ.க.வின் தலைமை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்து வருகிறது. காரணம், மணிப்பூர் முதல்வராக பதவி வகிக்கும் பைரன் சிங், மணிப்பூரின் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர். அதாவது, மெய்தி சமூகத்தை சார்ந்தவர். அவரை, தகுதிநீக்கம் செய்தால் தங்களது ஆட்சி கவிந்து விடுமோ என்ற அச்சம் தான் பா.ஜ.க.வின் தலைமைக்கு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய, சட்டப்பேரவை கூட்டத்தொடர் மட்டும் தடையில்லாமல் நடந்து வருகிறது. காரணம், சட்டப்பேரவை இயங்காவிட்டால், ஆட்சி கவிழ்க்கப்படும்.

எனினும், ஆட்சிக்கவிழாமல் காப்பதற்கு நடத்தப்படும் பா.ஜ.க அரசால் நடத்தப்படும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்களை, பா.ஜ.க.வின் குகி சமூக உறுப்பினர்களே தொடர்ந்து புறக்கணித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

Also Read: வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடரும் பா.ஜ.க.வின் அவசரத்தனம் : நீடிக்கும் பா.ஜ.க.வின் இரட்டிப்பு மனநிலை!