Politics

மோடி திறந்து வைத்த 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை... வெறும் 9 மாதத்தில் தூள் தூளானது - பின்னணி ?

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியில் ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு (2023) சத்ரபதி சிவாஜி சிலை பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலையானது கடற்படை தினத்தன்று டிசம்பர் 4-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சூழலில் சிலை திறக்கப்பட்டு ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், தற்போது சிலை உடைந்து தூள் தூளாக ஆகியுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்த கட்டுமானம் பாதிப்படைந்துள்ளது. இந்த சூழலில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை, சரிந்து கீழே விழுந்து சல்லி சல்லியாக நொறுங்கியுள்ளது. இந்த சிலையின் காலின் பாதம் பகுதி மட்டுமே சிலை இருந்த இடத்தில் இருக்கிறது. மற்ற பகுதிகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு மாநில அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது சிவாஜி சிலை இருந்த இடத்தை மாநில அரசு முறையாக பராமரிக்காததே முக்கிய காரணம் என்று கூறி வருகின்றனர். மேலும் கட்டுமான பணிகள் முடிந்து ஓராண்டு கூட நிறைவு பெறாத சூழலில், கனமழை, காற்று காரணமாக ஒரு சிலை எப்படி விழுந்திருக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும் என்றும், சிலை கட்டுமானத்தின் போது முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சுதர்ஷன் சேது பாலம்

முன்னதாக குஜராத்தின் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சுதர்ஷன் சேது பாலம், திறந்த 5 மாதங்களில் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரூ.980 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த பாலம் , நாட்டின் மிக நீளமான கேபிள்-தடுப்புப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிறையில் சொகுசு வாழ்க்கை : நடிகர் தர்ஷன் குறித்து இணையத்தில் வெளிவந்த வீடியோவால் பரபரப்பு!