Politics

அரசுப்பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதிக்கம்! : ஒன்றியத்தை தொடர்ந்து மாநிலங்களிலும் தொடரும் அவலம்!

மத அரசியலை, பாகுபாடு அரசியலை முன்னெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் ஆதிக்கம், அரசுப்பணிகளிலும் நீட்டிக்கப்பட தொடங்கியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசுப்பணியாளர்களும், மாநில அரசுப்பணிப்பணியாளர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அப்போதைய ஒன்றிய, மாநில அரசுகளால் தடைவிதிக்கப்பட்டது.

காரணம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படை கருத்தியல் ஒரு குறிப்பிட அடக்குமுறைவாத வாழ்வியல் நடைமுறையை செயல்படுத்துவதே, அந்த கருத்தியல் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனை பிறப்பால் வேறுபடுத்தியது. ஆகவே, பிறப்பால் வேறுபிரிக்கும் ஒரு கருத்தியலை அரசுப்பணியாளர்கள் பின்பற்றினால், அவர்களால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான சேவைகள் வழங்க இயலாது என்பது தான்.

எனினும், அடக்குமுறைவாத வாழ்வியலை செயல்படுத்தியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தன்வசமாக்கிய பின், தனது எண்ணத்தை செயலாற்றி வருகிறது பா.ஜ.க.

அது மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி. அதனை நிரூபிக்கும் வகையில் தான், கடந்த மாதம் ஒன்றிய அரசுப்பணியாளர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபடுவதற்கு இருந்த தடையை நீக்கியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் பா.ஜ.க அரசும், அம்மாநில அரசுப்பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இனி ஈடுபடலாம் என மாநில அரசுப்பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களான அரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ் க்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கம்! : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!