Politics

90% மக்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும்! : மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!

இந்தியாவில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது, உலகின் மிகப்பெரிய மக்களாட்சி அமைந்திருக்கிற நாடு இந்தியா என்று முன்மொழியப்பட்டு வந்தாலும், அனைத்து சமூகத்தினருக்குமான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

உரிமை மறுக்கப்படுவதற்கு தொடக்கமாக இடஒதுக்கீட்டில் நீடிக்கிற பாரபட்சம் அமைந்துள்ளது. பாரபட்சத்தை கூட்டும் நடவடிக்கைகளில் ஒன்றிய பா.ஜ.க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனால் சமூகநீதியை கேட்டும், சமூகநீதியை வழங்க அடிப்படியாக இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு கோரியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது X தளப் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, “இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும் வகையிலும், சம உரிமை வழங்கிடும் வகையிலும் அரசியலமைப்பு அமைந்திருந்தாலும், 90% இந்தியர்களின் வளர்ச்சியும், வாய்ப்பும் புறக்கணிக்கப்படுகின்றன.

அந்த 90% மக்களாக பட்டியலினத்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும், பொதுப்பட்டியலில் உள்ள உழைக்கும் மக்களும் இருக்கின்றனர். இது மிகவும் வருந்துவதற்குரிய செய்தியாக இருக்கிறது.

எனவே, அரசியலமைப்பின் வழிகாட்டலுடன் சமூகநீதியையும், சமூக பொருளாதார சம உரிமையையும் வழங்கிடும் பொருட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு, நாட்டின் 90% மக்களை சமூக சார்ந்தும், பொருளியல் சார்ந்தும் வளர்ச்சி அடைய உதவும்.

மேலும், நாட்டில் நடக்கிற பல்வேறு மோசடிகளை வெளிச்சமிட்டு காட்டும் கருவியாகவும் சாதிவாரி கணக்கெடுப்பு அமையும். இதுவே, மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

இதனை பிரதமர் மோடி கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் அல்லது அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருந்து, சாதிவாரி கணக்கெடுப்பு செயல்படுத்தப்படுவதை காண்பவராக மோடி இருப்பார்” என்றார்.

Also Read: அரசுப்பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதிக்கம்! : ஒன்றியத்தை தொடர்ந்து மாநிலங்களிலும் தொடரும் அவலம்!