Politics

நிதி நிறுவன மோசடி : பாஜக கூட்டணி கட்சி தலைவர் மீது 800 புகார்கள்... சுமார் ரூ. 525 கோடி சுருட்டல் !

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிட்ட்' என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணம் கேட்டு முறையிட்டனர். ஆனால், உரிய பதில் கிடைக்காத நிலையில்,பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவிலும் முறையாக புகார் அளித்தனர்.

தொடர்ந்து பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனையடுத்து ஆகஸ்ட் 13 ம் தேதி திருச்சியில் தலைமறைவாக இருந்த பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் தேவநாதன் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் முடிவில் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் அவருக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சிக்கு சீல் வைக்கப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து சென்றனர்.

இந்த நிலையில், தேவநாதன் மீது இதுவரை 800 புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேவநாதன் உள்பட மூன்று பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் , நிதி மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கும் டன்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் தேவநாதன் மீது இதுவரை 800 புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சுமார் 525கோடி வரை இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதானி - செபி உறவு : “ஒன்றிய அரசு மறைக்க பார்த்தால்...” - பத்திரிகையாளர் இந்து என்.ராம் எச்சரிக்கை !