Politics

பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பை நீக்கிய டெல்லி போலீஸ் !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச்சையில் சிக்கினார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் ஒன்றிய பா.ஜ.க அரசு பெண் வீரர்களின் குரல்களுக்குக் காது கொடுக்காமல் பிரிஜ் பூஷனை காப்பாற்ற போலிஸாரை கொண்டு போராட்டத்தை ஒடுக்கப்பார்த்தது. ஆனால் மல்யுத்த வீரர்கள் உறுதியுடன் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.அதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாட்டுக்காக பல்வேறு பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசு இந்த அளவு மோசமான நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வேறு வழி இல்லாமல் பிரிஜ் பூஷன் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு காரணமாக POSCOவில் வழக்குப் பதிவு செய்தும், அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், பிரிஷ் பூஷனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கு சாட்சி கூறவிருந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை டெல்லி காவல்துறை திரும்பப்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெல்லி காவல்துறை டெல்லி துணை ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பாஜக அரசின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது என கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக அரசின் இந்த செயலை எதிர்க்கட்சிகளும் கண்டித்து வருகின்றன.

Also Read: "நீங்கள் மாணவிகள் மட்டுமல்ல; நம் திராவிட மாடல் அரசின் புதுமைப் பெண்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !