Politics

Lateral entry என்றால் என்ன? : இந்திய ஆட்சிப் பணியில் பா.ஜ.க.வின் கருத்தியல் திணிப்பு நடவடிக்கையா?

Lateral entry என்பது நடைமுறைக்கு மாற்றாக, அரசின் பலதரப்பட்ட துறைகளின் உயர் பொறுப்புகளில், துறை சார்ந்த வல்லுநர்களை ஆட்சியர்களாக பணியமர்த்தும் முறை.

வல்லுநர்களை நியமிப்பது சரி தான் என்ற கருத்துகள் வலுத்தாலும், இந்நடவடிக்கை சர்ச்சையாக மாறியதற்கு சில காரணங்கள் உள்ளன. அதிலும் மிகுந்த சர்ச்சை எழுப்பக்கூடிய காரணமாக மாறியுள்ளது, அண்மையில் 45 பேருக்கு, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) கீழ் பணி வழங்கியது.

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) என்பது? அதில் Lateral entry?

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது ஒவ்வொரு ஆண்டும், தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வெழுதக்கூடிய சுமார் 5 இலட்சம் பேரில், தகுதிபெற்ற சுமார் 1,000 பேருக்கு இந்திய அரசின் துறைகளில் ஆட்சியர்களாக பணி அமர்த்துவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு.

UPSC-ன் கீழ் தேர்வெழுதும் தேர்வர்கள் தகுதிபெற, புதுமுகத்தேர்வு (Prelims), எழுத்துத்தேர்வு (Mains), நேர்காணல் (Interview) என மூன்று படிநிலைகள் உள்ளன.

மேலும், வயது வரம்பு, இடஒதுக்கீடு என பல கட்டுப்பாடுகளும், UPSC தேர்வர்களுக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, UPSC தேர்வை, தமிழில் கூட எழுதும் முறை இருந்து வந்தது, ஆனால், தற்போது ஆங்கிலம், இந்தி மட்டுமே தேர்வு மொழியாக மாறி இருக்கிறது.

இவ்வாறு, காலம் கடந்து வருகிற நிலையில், UPSC பணியமர்த்த நடவடிக்கைகளில் மாற்றங்களும் தவிர்க்கப்படாமல் இடம்பெற்று வருகின்றன.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் Lateral entry-ம் ஒன்று. இதனை நடைமுறைக்கு கொண்டு வந்த அரசு, மோடி அரசு. கடந்த 2018ஆம் ஆண்டு இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளில் பலர், Lateral entry வழியாக, இந்திய ஆட்சிப்பணியில் தலைமை பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதில், தற்போது புதிதாக 45 உயர் பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டவர்களும் அடங்குவர். இந்நிலையில், “புதிதாக பணியமர்த்தப்பட்ட 45 பேரில், யாருக்கும் இடஒதுக்கீட்டின் வழி வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூடுதலாக, பா.ஜ.க.வின் கருத்தியல் தலைமையாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தான் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது” என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

இடஒதுக்கீட்டையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ஊடுருவலையும் முதன்மைப்படுத்த காரணம்?

வகுப்பவாத சிந்தனை கொண்டவர்கள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க நிர்வாகிகளை பொருத்தவரை, அரசியல் பொறுப்புகளில் மட்டுமல்லாது, இந்திய ஆட்சிப்பணியின் உயர் பொறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் ஒருமித்த கருத்தியல் சிந்தனை கொண்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே முதன்மை இலக்காக அமைந்துள்ளது.

பா.ஜ.க.வினர் ஆட்சியைப் பிடித்தற்கு முன்பு கூட, ஆட்சிப் பணி நியமனத்தில், இந்நடவடிக்கை இருந்து வந்தது. அதற்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன்பு திணிக்கபட்ட ஒரு நடைமுறையே தொடக்கமாகவும் இருந்தது.

1,000 ஆண்டுகளுக்கு முன், தொழிலின் அடிப்படையில் சாதி வகுக்கப்பட்டு, அடிநிலை மக்கள் என சித்தரிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு கல்வி, உயர் பதவி வாய்ப்புகளில் புறக்கணிப்பு ஆகியவை அரங்கேறின.

இதனை பயன்படுத்திக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், பிற மக்களிடம் வகுப்புகளை வகுத்து வஞ்சித்து வந்தனர். உடை அணிவதில் உரிமை மறுப்பு, நிமிர்ந்து நடப்பதில் உரிமை மறுப்பு, ஏன் சுயமாக சிந்தப்பதில் கூட உரிமை மறுப்பு தலைவிரித்தாடின. இதன் தொடர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் அமைப்பட்ட இந்திய ஆட்சிப்பணியிலும் நிலவியது. கல்வி நிலையங்களிலும் காணப்பட்டு வந்தது.

இந்நடமுறையிலிருந்து மீண்டு சமூக அநீதிகளை அழிக்க, பல முற்போக்கு தலைவர்களால் உருவாக்கப்பட்ட முறையே இட ஒதுக்கீடு முறை. இம்முறையினால், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, அடிநிலை மக்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், கல்வி நிலையங்களிலும், உயர் பொறுப்புகளிலும் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், கடந்த 50ஆண்டுகளில், இட ஒதுக்கீட்டின் விழுக்காடு அதிகரித்தது என தெரிவித்துக்கொண்டாலும், அதன் எண்ணிக்கை அடிநிலையில் தான் நீடிக்கிறது.

அதாவது, கடந்த காலங்களில் ஒடுக்கிய சமூகத்தினரின் தலைமுறையினரில், 1000 பேரில் 700 பேருக்கு, தற்போது அரசுப்பணி வாய்ப்பு உள்ளது என்றால், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என அடையாளப்படும் உழைக்கும் மக்களின் தலைமுறையினரில், 1000 பேருக்கு 100 பேருக்கு அரசுப்பணி வாய்ப்பு பெற்றாலே, அரிது என்ற நிலை நீடிக்கிறது.

இதனை எதிர்த்து தான், எதிர்க்கட்சிகள் “இடஒதுக்கீட்டில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான, நீதி தற்போது உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும், சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகின்றன.

நடப்பு சர்ச்சைக்கும், இதற்குமான தொடர்பு?

ஆயிரம் ஆண்டுகள் போராடி பெறப்பட்ட உரிமை, இடஒதுக்கீடு. அவ்வாறு பெறப்பட்ட உரிமையை, மேலும் உயர்த்த வேண்டிய சூழலில், அதனை முழுவதுமாக 1000 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துச்செல்லும் நடவடிக்கையாகவே, தற்போது Lateral entry-ல் இடஒதுக்கீடு முறை புறக்கணிக்கப்பட்டது அறியப்படுகிறது.

மேலும், ஒரு சமூகத்தில் பிரிவினையை கொண்டுவரத் துடித்திடும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்கள், இந்திய ஆட்சிப்பணியில் நியமிக்கப்பட்டால், அவர்கள் மக்களுக்காக செயல்படாமல், அதிகாரத்துவத்தையும், ஆதிக்கத்துவத்தையும் நிறுவுவதையே நோக்கமாக கொண்டு செயல்படுவர் என்ற அச்சமும், தற்போதைய சர்ச்சைக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

Also Read: “OBC, SC, ST மக்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறது Lateral Entry” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!