Politics

“OBC, SC, ST மக்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறது Lateral Entry” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த சூழலில் இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 'Lateral Entry என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.

Lateral Entry என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்; தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும்.

ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட - நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.

Also Read: Lateral Entry : ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு!