Politics
கலைஞர் 100 நாணயம் : “MGR நினைவு நாணயத்தில் தமிழ் எங்கே?” - பழனிசாமிக்கு வலுக்கும் கண்டனங்கள் !
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்திற்கு ஒப்புதல் அளித்து கடந்த ஆக 18-ம் தேதி 'கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்' வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், பாஜக எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த நாணாயத்தின் மாதிரியை காட்சிக்கு திறந்து வைத்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங். மேலும் கலைஞர் குறித்து ராஜ்நாத் சிங், மிகவும் புகழ்ந்து உரையாற்றினார். இப்படியாக இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி பல்வேறு போலியான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதாவது, கலைஞர் 100 ரூபாய் நாணயத்தில் தமிழே இல்லை என்றும், ராகுலை அழைக்காமல் ஒன்றிய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது ஏன் ? என்றும் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார். இந்த சூழலில், "ஒன்றிய அரசு நடத்தும் விழாவுக்கு ஒன்றிய அமைச்சர் பங்கேற்கிறார். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பதாக" பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
மேலும் கலைஞர் 100 ரூபாய் நாணயத்தில் 'தமிழ் வெல்லும்' என்று தமிழில் இடம்பெற்றுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். நாணய வெளியீட்டு விழாவுக்கு பழனிசாமி விடுத்த அழைப்பை ஒன்றிய அரசு ஏற்காமல் அவரை மனிதராக கூட மதிக்கவில்லை என்று விமர்சித்தார்.
அதோடு, ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்து நாணயங்களிலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் என்றும், தமிழில் சிறப்பு அனுமதி பெற்று வெளியிடலாம் என்றும், நாட்டு நடப்பு, அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாணயத்தில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அந்த வகையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தியும் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவு வருமாறு :
எடப்பாடி பழனிசாமி அவர்களே ஏன் நீங்கள் வெளியீட செய்த எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாணயத்தில் தமிழ் இல்லை…? இந்தியா முழுவதும் நாணயம் அச்சிட்டு வெளியீடு செய்வது ஒன்றிய அரசு தான்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி விதியின் படி நாணயத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம் பெறுகிறது.
சிறப்பு அனுமதி பெற்று நினைவு நாணயங்களில் மற்ற மொழி எழுத்துகளை இடம்பெற செய்யலாம் அப்படித்தான் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பெயரினையும், எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் நினைவாய் தமிழ்வெல்லும் என்கிற வார்த்தையையும் நினைவு நாணயங்களில் இடம் பெற செய்தனர்.
தாங்கள் ஏன் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாணயத்தில் தமிழ் எழுத்துகளை இடம் பெற செய்ய வைக்கவில்லை??
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!