Politics

போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை ஒழிப்பதா? - ஒன்றிய அரசை கண்டித்து கி.வீரமணி அறிக்கை !

யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை கண்டித்து ஒன்றிய அரசை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் (Union Public Service Commissions) குறித்து நமது இந்திய அரசியல் சட்டத்தின் 11ஆவது அத்தியாயம் – கூறுகள் (Articles) 315 தொடங்கி, 323 வரை பல்வேறு அம்சங்கள் பற்றி தெளிவாக வரையறுத்துள்ளன.

அரசியல் சட்டம் என்ன கூறுகிறது?

அதன்படி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும், தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலமே ஆட்சி அதிகாரத்துறை நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டம் கூறும் நடைமுறை.

இதை மீறி, பிரதமர் மோடி பதவியேற்ற கடந்த 10 ஆண்டுகளின் பிற்பகுதியிலும் தற்போதும், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றிய அரசின் இணைச் செயலர் (Joint Secretary) கூடுதல் செயலர் (Additional Secretary) போன்ற மிக முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு, தனியார் துறையில் பணியாற்றிய அனுபவம் உடையவர்கள் என்ற பெயரில் – சீட்டுக் கட்டின் இடையில் சீட்டைச் சொருகுவது போல் அவர்களை அழைத்து தேர்வு செய்ய (Lateral Entry) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் பிரதமர் மோடி அரசு ஆணையிட்டு நடைமுறைப்படுத்துவது, முற்றிலும் அரசியல் சட்டத்தை மீறிய செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ள கருத்து மிகச் சரியான – மறுக்க முடியாத உண்மையாகும்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனைப் புறக்கணிப்பதா?

இந்திய யூனியன் அரசின் முக்கிய நியமனங்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.ஆர்.எஸ். போன்ற பல முக்கிய பதவிகளில் இப்படி இடைச் சொருகல் செய்வது, சட்ட விரோதம் என்பதைத் தாண்டி, அரசியல் சட்டப்படி குடிமக்களின் வேலை வாய்ப்பு உரிமையில் கடைப்பிடிக்க வேண்டிய இடஒதுக்கீடையும், சமூகநீதியையும் அடியோடு புறக்கணிப்பதாகும்!

தங்களுக்கு ‘‘வேண்டியவர்களைக்’’ கொண்டு வந்து இப்படி நியமனம் செய்யும் முறையை – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் – அரசியல் சட்டம் கூறும் நடைமுறை – அரசின் சட்ட திட்டங்கள் (Rules and Regulations) இவற்றைப் பற்றியெல்லாம் கடைப்பிடிக்காது, தானடித்த மூப்பாக, தன்னிச்சையாக இப்படி நியமனம் செய்வது எவ்வகையிலும் நியாயம் அல்ல!

போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை ஒழிப்பதா?

ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற பெரும் பதவிகளுக்குத் தேர்வும், பயிற்சியும் பெறாதவர்களை, இட ஒதுக்கீடு இன்றி, திடீரென அதிகாரிகளாகக் கொண்டு வந்து அமர்த்தும் இந்த இடைச்சொருகல் முறை மூலம் காலங்காலமாக கல்வி - உத்தியோகங்கள் மறுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி ஆகிய பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, சமூகநீதியைப் பறிக்க முயல்கிறார்கள். 5 ஆயிரம் ஆண்டு சமூக அநீதிக்குப் பரிகாரம் தேடும் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற்று 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் திடீரென்று மின்னல் தாக்கிக் கண்களைப் பறிப்பதுபோல இட ஒதுக்கீட்டைப் பறிப்பது அநீதியாகும்.பட்டாங்கமாய் இடஒதுக்கீடு பெற உரிமை பெற்றவர் களின் உரிமைகள் இதன் மூலம் பறிக்கப்படுகின்றன.

அதோடு இதில் புதைந்துள்ள மற்றொரு ‘‘கண்ணி வெடியி’’னையும் ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ளார்! இந்த முறையில் Lateral Entry Appointments – 45 பதவிகளுக்கான விளம்பரங்கள் – இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் முதலிய பதவிகளுக்கு விளமபரம போட்டுள்ளார்கள்.

நீண்ட காலமாக அடி மட்டத்திலிருந்து அனுபவம் பெற்று படிப்படியாக பதவி உயர்வு பெற்று இப்பதவிகளில் அமர வேண்டிய சீனியாரிட்டிப்படி உள்ள அதிகாரிகளின் மனம் வெந்து நோகாதா? அதற்கு என்ன சமாதானம்? அவர்கள் உரிமைப் பறிப்பு நியாயமா?

ஆர்.எஸ்.எஸ்.காரர்களை உள்ளே திணிப்பதா?

‘‘கொல்லைப்புற வழி’’யாக இப்படி நியமனங்கள் திடீரென்று நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் தங்களுக்கு வேண்டிய ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர்களை முக்கியமான கேந்திரப் பதவிகளில் ‘நட்டு வைக்கும்’ ஏற்பாடே இது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும்!

Anti Constitutional, Anti Social Justice இரண்டுமே இதில் உள்ளன. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன் – பல ஆண்டு பதவியிலிருக்க வேண்டிய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தலைவர் தனது பதவியிலிருந்து திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு விலகியதும், அதனை உடனே மோடி அரசு ஏற்றதும் – ஒரு வேளை இம் மாதிரி அரசியல் சட்ட விரோத செயல்களுக்குத் தானும் துணை போவதாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால் இருக்கலாம் என்ற ஊகங்களுக்கும் இது இடந்தரக் கூடுமல்லவா?

இதனை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அத்துணைக் கட்சிகளும் அமைப்புகளும் கண்டித்து, இந்தத் திடீர் உரிமைப் பறிப்பு, தனியார் துறையின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கெதிராக கண்டனக் குரலை நாடு தழுவிய நிலையில் ஏற்படுத்துவது அவசர அவசியமாகும்!சமூகநீதி மண் – பெரியார் மண்ணான தமிழ்நாடு இதனை எதிர்த்து பெருந்திரளாக – பெரும் கண்ட னங்களை எழுப்ப வேண்டும்.

ஆகஸ்டு 24 இல் போராட்டம்

வருகிற 24ஆம் தேதி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடும்!

இதனை மக்களிடம் விளக்கி ஆங்காங்கு பிரச்சார மேடைகள் முதல் பல சமூகநீதி பாதுகாப்புப் பணிகளைத் தவக்கமின்றி உடனே துவக்கிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “தமிழ்நாட்டில் இரயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும்” - ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் !