Politics

"இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கலைஞர்" - பிரதமர் மோடி புகழாரம் !

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த நாணய வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அரசியலிலும், இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர் கலைஞர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது அவரின் நினைவையும் அவரால் நிலை நிறுத்தப்பட்ட லட்சியங்களையும் போற்றும் வகையில் இருக்கும். இந்த தருணத்தில் கலைஞருக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்.

2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலை நோக்கு பார்வை உதவும். தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் பங்கு மகத்தானது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும்"என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகளும் ஆதரவும் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. .

Also Read: UPSC- யில் பறிக்கப்பட்ட SC,ST,OBC இடஒதுக்கீடு : ஒன்றிய அரசின் செயலை அம்பலப்படுத்திய திமுக MP வில்சன் !