Politics

பல முறை மன்னிப்பு கேட்டும் திருந்தாத பாபா ராம்தேவ் - அலோபதி மருத்துவத்துக்கு எதிராக மீண்டும் அவதூறு !

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.

அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் இனி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பதாஞ்சலி நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் மற்றும் ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அலோபதி மருத்துவதுக்கு எதிராக கருத்து தெரிவித்து ராம்தேவ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், "அலோபதியின் நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.நச்சு செயற்கை மருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. எனவே, உள்நாட்டு மருத்துவத்துக்கான போராட்டத்தில் எங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவோம்"என்று கூறியுள்ளார்.

மேலும் , இந்த பேட்டியின்போது"உலகம் முழுவதும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக பத்து கோடி மக்களை ஆங்கிலேயர்கள் கொன்றனர்" என்று கூறிய ராம்தேவ், இஸ்லாமிய மதத்துக்கும் எதிராக சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: "மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியல்" -பொது சிவில் சட்டம் குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம் !