Politics

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, அது குறித்து வதந்தி பரப்பினால் சிறை" - கேரள அரசு அறிவிப்பு !

கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை 1893 - இல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894- இல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை அப்போதைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் திறந்துவைத்தார்.

“முல்லைப் பெரியாறு அணை, பொறியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உறுதியும், நவீன தொழில்நுட்பமும், பொறியியல் உலகில் ஆச்சர்யமாகப் பேசப்படும் - அதிசயமாகப் பார்க்கப்படும். காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையே!” என்று அணை திறப்புவிழாவில் பேசினார் வென்லாக். அத்தகைய கம்பீரத்தோடு இன்றும் முல்லைப் பெரியாறு அணை காட்சி அளித்து வருகிறது.

ஆனால், இந்த அணையை முன்வைத்து கேரளாவில் மிகப்பெரிய அரசியல் நடைபெற்று வருகிறது. இந்த அணை சேதமடைந்துள்ளதாகவும், அதனால் அந்த அணையை இடிக்கவேண்டும் என்றும் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் இந்த கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், “முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் லட்சக்கணக் கானவர்கள் உயிரிழக்கப் போகிறார்கள் எனவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் பரப்புகின்றனர். உண்மையில் அதுபோன்ற ஆபத்து ஏதும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதால் அது குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து கேரளாவில் சமூக ஊடகங்களில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு பொய் தகவல்கள் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு கேரளா நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வீண் வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.