Politics

BHEL அண்டை நாடுகளிலிருந்து மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு பாரபட்சமான கட்டுப்பாடு - CPM கடிதம் !

BHEL நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும், இந்தியாவின் எல்லை அருகமை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக உள்ள பிரச்னைகளை களைய வலியுறுத்தியும் பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-

இந்தியாவின் மகாரத்தின நிறுவனமாகத் திகழும் BHEL பொதுத்துறை நிறுவனம் குறித்து தங்களிடம் முறையிட விரும்புகிறோம். மேலே குறிப்பிட்ட, 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொதுக் கொள்முதல் மீதான கட்டுப்பாட்டு ஆணையால், BHEL நிறுவனம் ரூ.4000 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திக்கும் இக்கட்டான நிலையில் உள்ளது. 

கீழே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளின் வீச்சைத் தாங்கள் ஆராய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்சனையைக் களைவதற்ககுத் தேவையான அனைத்து நேர்மறையான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

பொது நிதி விதிகள் 2017-ல் (General Financial Rules-GFR 2017) கடந்த 2020 ஜுலையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், BHEL நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மீது ஏற்படுத்தியுள்ள நாசகர தாக்கத்தை தாங்கள் ஆய்வுசெய்திட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  பொது நிதி விதிகள் 2017-ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், இந்திய அரசாங்கம் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் இருந்து ஏலதாரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகைசெய்கிறது. தேசிய பாதுகாப்பு, இராணுவம் என்கிற அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விதிகள் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், தன்னாட்சி முகமைகள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் பொது-தனியார் கூட்டுத்திட்டங்கள் (Public Private Partnership Projects) ஆகிவற்றிக்குப் பொருந்தும். மாநில அரசாங்கங்களும் இந்த திருத்தப்பட்ட நிதி விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம், இந்த விதிகள் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது; இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கோ, அந்த நாடுகளின் வர்த்தக முகமைகளுடன் வர்த்தகம் செய்வதற்கோ தனியாருக்கு எந்தவிதத் தடையும் கிடையாது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக 63.17% பங்குகளுடன் தொடங்கப்பட்ட BHEL நிறுவனம், நாடுமுழுவதிலும்  இன்றைக்கு16 உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருக்கிறது; தமிழ்நாட்டில் திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள 3 உற்பத்தியகங்களும் இவற்றில் உள்ளடக்கம். இந்தியாவின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் BHEL நிறுவனத்திற்கு முக்கிய பங்குள்ளது. தற்போதைக்கு 1,40,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் BHEL நிறுவனத்தின் கைவசம் இருக்கின்றன.

இந்த ஆர்டர்கள் அனைத்தும் L1 என்கிற குறைந்தவிலை ஏலதாரர் அடிப்படையில், (Lowest Bidder), முழுக்க முழுக்க BHEL நிறுவனத்தின் செயல்திறன் மீதான மதிப்பீடுகளின் அடிப்படையில், எவ்வித சிபாரிசும், தலையீடும் இன்றி BHEL நிறுவனத்தால் பெறப்பட்டவை. 15-20% அளவிற்கு குறைக்கப்பட்ட விலையில்  L 1 அடிப்படையில் இந்த ஆர்டர்கள் பெறப்பட்டன. BHEL நிறுவனம் முந்தைய காலங்களில் பெற்றுவந்ததைப் போல, எல்லைப் பகிர்வு நாடுகளில் இருந்து மூலப்பொருட்களைத் தருவிக்கலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆர்டர்கள் வகுக்கப்பட்டு, பெறப்பட்டன.

GFR-ல் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்கள், பிற நாடுகளில் இருந்து 20-40% அளவிற்கு கூடுதல் விலையில் மூலப்பொருட்களை  இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு BHEL நிறுவனத்தைத் தள்ளியுள்ளன. இதன் விளைவாக, குறைவான லாபம் என்ற அடிப்படையில் பெறப்பட்ட இந்தப் புதிய ஆர்டர்களில் இருந்து BHEL நிறுவனத்துக்கு துளிலாபமும் கிடைக்காது.

BHEL நிறுவனம் கொதிகலன்களை (பாய்லர்கள்) உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியகங்களை இந்தியாவில் வளர்த்தெடுக்காத காரணத்தால், BHEL  தனக்கான குறைந்தவிலை மூலப்பொருள் இறக்குமதிக்கு எல்லைப் பகிர்வு நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. புதிய கட்டுப்பாடுகளால், மூலப் பொருட்களை உரிய நேரத்தில் தருவிப்பது, உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்த பாய்லர்களை கையளிப்பது என அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

இதன் விளைவாக குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து பொருட்களை வழங்காத தவறுக்காக BHEL நிறுவனம் ரூ.6000 கோடி தண்டத்தொகை கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளால் BHEL நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படுவதால், அந்த நிறுவனத்தின் 30,000 நிரந்தரப் பணியாளர்கள், 20,000 ஒப்பந்தப் பணியாளர்கள், மற்றும் இவர்களைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களுடைய எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களால் ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலைமை, பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தின் செயல்திறனைக் குறைக்கு முற்படுகிறது.  BHEL நிறுவனத்தின் மீதான இத்தகைய எதிர்மறையான தாக்கம் என்பது சந்தையில் BHEL நிறுவனத்துடைய நிலையையும், மதிப்பையும் சரியச்செய்து, தனியார்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். BHEL போன்ற பிரம்மாண்டமான ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு ஏற்படுத்தப்படும் இத்தகைய பாதிப்புகள், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளை வலுவிழக்கச் செய்யும் தாக்கங்களைக் கொண்டிருக்கும். 

இந்தப் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள் மீது பாரபட்சமான கட்டுப்பாடுகளை விதிக்கிற GFR 2017-ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நீக்குவதற்கு வேண்டிய அனைத்தையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தங்களுடைய இந்தத் தலையீடு BHEL நிறுவனத்தை பாதுகாக்கும் என்பதோடு, நம்முடைய மாபெரும் தேசத்தையும், நம்முடைய மக்களையும் பாதுகாத்திடும்.

Also Read: “வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பதற்கு இதுதான் காரணம்” - செல்வப்பெருந்தகை பளீச் !