Politics

"அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரிடர் நிதியை ஒன்றிய அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும்" - சசி தரூர் MP கோரிக்கை !

தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் (ரேடியன்ட் குரூப் ஆஃப் கம்பெனியின் ) 2024ஆம் ஆண்டு ரேடியன்ட் வெல்னஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, போரில் சிறப்பாக பணியாற்றிய சுபேதார் மேஜர் சஞ்சய் குமாருக்கு ரேடியன்ட் நேஷனல் ஐகான் விருது 2024-ஐ காங்கிரஸ் எம்பி சசி தரூர், முன்னாள் ராணுவ ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக், ரேடியன்ட் வெல்னஸ் நிறுவனர் ரேணுகா டேவிட், நிறுவனத்தின் தலைவர் டேவிட் தேவசகாயம் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டு இருக்கிறார். தாமதமாக பார்வையிட்டு இருந்தாலும், அது முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய அளவிலான ஆதரவு தான் தற்போது வயநாட்டிற்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவை.

இதை அடுத்து மிக முக்கியமானதாக நாம் பார்க்க வேண்டியது அந்தப் பகுதிக்கான மறுவாழ்வு, மக்கள் குடியேறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் நானும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மட்டுமே நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண நிதியாக வழங்க முடியும். அதற்கு ஒன்றிய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

shashi tharoor

பேரிடர்கள் ஏற்படுவது எதிர்பாராத ஒன்று. அவ்வாறு ஏற்பட்ட பின்னர் ஒன்றிய அரசு அதை எவ்வாறு கையாள்கிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய பேரிடராக அறிவிக்கும் போது தான் தேசிய பிரச்சனையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எனது கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.

நான்கு மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை எனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பாஜக ஆளும் நான்கு மாநிலங்களுக்கு இது அறிவிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டி காட்டி இருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இது அறிவிக்கப்படவில்லை என்பதையும் முக்கிய கருத்தாக முன்வைத்துள்ளேன்.

இது போன்ற பேரிடர் காலத்தில் பாரபட்சமின்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கேரளாவோ, தமிழ்நாடோ எந்த மாநிலமாக இருந்தாலும் பேரிடர் காலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிதி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். பிரதமர் நிவாரண உள்ளிட்ட நிவாரண நிதிகள் முறையாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். பேரிடர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி, பி.எம் கேர்ஸ் நிவாரண நிதி போன்ற நிதிகள் உண்மையாகவே பாதிப்பு அதிகம் உள்ள மக்களுக்கு முறையாக சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே என் கோரிக்கை"என்று கூறினார்.

Also Read: “இப்படியெல்லாம் கூறுபவர்கள் கருத்து குருடர்கள் என்றுதான் கருத வேண்டும்” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !