Politics

மாவட்ட ஆட்சியர்கள் மீதான வழக்கு : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் !

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

தொடர்ந்து இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஃப் ஐ ஆர் உள்பட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், முகுல் ரோத்தகி ஆகியோர், அமலாக்கத்துறை கேட்ட அனைத்து ஆவணங்களுமே கொடுக்கப்பட்டு விட்டன என்று ஆதாரங்களுடன் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு ஆவணங்களை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் உள்ளது. ஆனாலும் தற்போது வரை இந்த ஆவணம் இல்லை, அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக கூறி வருகிறீர்கள் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு குறித்த 7000 FIR விவரங்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அதன் விவரங்களை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசிடம் வழங்குவதாக கூறி வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைக்கும்படி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், முன்பு ஒரு சில ஆவணங்கள் என்று கூறினார்கள். தற்போது 7000 என்கிறார்கள். எந்த ஆவணம் கிடைக்கவில்லை என்று கூறினால் அதனை மீண்டும் வழங்க தயார் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீட்டுக்கு தீ வைப்பு... போராட்டக்காரர்கள் ஆத்திரம் - காரணம் என்ன?