Politics

“வெப்ப அலைகளால் இங்குதான் அதிக உயிரிழப்புகள்” - கனிமொழி எம்.பி-யின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் !

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இதன் மீதான விவாதம் முடிவடைந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கனிமொழி எம்.பி., எழுத்துபூர்வமாக கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அந்த கேள்விகள் பின்வருமாறு :

* கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள்,

* இத்தகைய வெப்ப அலைகளின் போது மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்த / எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள்

* தேர்தல் காலத்தில் வெயிலின் காரணமாக பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் திட்டமிடுகிறதா / முன்மொழிகிறதா?

இந்த நிலையில் கனிமொழி எம்.பி-யின் கேள்விகளுக்கு ஒன்றிய அறிவியல் - தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு :

“நாடு முழுவதும் வெப்ப அலைகளால் 2013-ம் ஆண்டில் 1,216 பேர், 2014-ல் 1248 பேர், 2015-ல் 1908 பேர், 2016-ல் 1338 பேர், 2017-ல் 1127 பேர்கள், 2018-ல் 890 பேர், 2019-ல் 1274 பேர்கள், 2020-ல் 530 பேர், 2021-ல் 374 பேர், 2022-ல் 730 பேர்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகவும் குறைவு.

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் வெப்ப அலைகளால் 5 பேர்தான் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 2013-ல் 418 பேர், 2014-ல் 244 பேர், 2015-ல் 654 பேர், 2016-ல் 312 பேர், 2017-ல் 231 பேர், 2018-ல் 97 பேர், 2019-ல் 128 பேர், 2020-ல் 50 பேர், 2021-ல் 22 பேர், 2022-ல் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB), உள்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கிய விவரங்கள் மூலமாக மேற்கண்ட தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது வெப்ப அலைகள் உட்பட தீவிர வானிலை நிகழ்வுகளின் போது உயிர் மற்றும் இழப்பைக் குறைக்க உதவியது.

* பருவகால கால மற்றும் மாதாந்திரக் கண்ணோட்டத்தை வழங்குதல், அதைத் தொடர்ந்து வெப்பநிலை மற்றும் வெப்ப அலை நிலைகளின் நீட்டிக்கப்பட்ட வரம்பு முன்னறிவிப்பு,

* இந்தியா முழுவதும் மாவட்ட வாரியான வெப்ப அலை பாதிப்பு அட்லஸ் தயாரித்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு வழங்கி தகுந்த நடவடிக்கை எடுப்பதில் உதவுதல்,

* தினசரி வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் வானிலை அபாய பகுப்பாய்வு,

* முழு நாட்டிற்கான ஹீட் இன்டெக்ஸ் முன்னறிவிப்பு மற்றும் மாவட்ட அளவில் வெப்ப அலை நிலைகளின் தாக்கம் சார்ந்த முன்னறிவிப்பு,

* வெப்-ஜிஐஎஸ் இயங்குதளத்தில் நிகழ்நேர வெப்ப அலை தகவல் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடுதல்,

* மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கூட்டாக வெப்ப செயல் திட்டங்கள் வெப்ப அலை வாய்ப்புள்ள 23 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் பிளாட்ஃபார்ம், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக தளங்கள் மூலமாக வெப்ப அலை பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைப் பரப்புதல் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் காலத்தில் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மாநிலங்களுக்கு, மாநில பேரிடர் மறுமொழி நிதி (SDRF) மற்றும் மாநில பேரிடர் தணிப்பு நிதி (SDMF) மூலம் நிதி ஆதரவு கிடைக்கும்.

நிதி உதவிக்காக மாநிலங்களிடமிருந்து கோரிக்கை இருந்தால், தேசிய பேரிடர் மறுமொழி நிதி (NDRF) மற்றும் தேசிய பேரிடர் தணிப்பு நிதி (NDMF) வழங்குவதற்காக, தொடர்புடைய வழிகாட்டுதல்களின்படி ஒன்றிய அரசு அதை பரிசீலிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !