Politics

"தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டத்தால் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்" - அமைச்சர் மா.சு பெருமிதம் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (05.08.2024) சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேரு நகரில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பயனாளிகளின் இல்லத்திற்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கி, இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "மருத்துவத்தை தேடிதான் மக்கள் செல்வார்கள். ஆனால் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலகிலேயே முதன்முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்கின்ற ஒரு மகத்தான சீர்மிகு திட்டத்தை 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கி வைத்தார்கள்.

இந்த திட்டம் மக்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவ சேவைகளான உயர் இரத்த அழுத்தம் (BP), நீரிழிவு நோய் சிகிச்சை (Diabetes), உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவுநோய் சிகிச்சை (BP and Diabetes), நோய் ஆதரவு சிகிச்சை (Palliative Care), இயன்முறை சிகிச்சை (Physiotherapy), சிறுநீரக நோய்க்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்குவது என்று 6 வகையான நோய்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கும் திட்டமாகும்.

உலகளவில் 60-70% மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்றும் உன்னதமான திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,86,13,872 பேர் பயனடைந்துள்ளனர்.

இதில் உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 92,59,821 பேர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 46,54,595 பேர், உயர் இரத்த அழுத்தம் மற்றம் நீரிழிவு நோய் இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்டவர்கள் 41,39,328 பேர், நோய் ஆதரவு சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 4,84,889 பேர், இயன்முறை சிகிச்சை (Physiotherapy) தேவைப்பட்டவர்கள் 6,59,576 பேர், டயாலிசிஸ் பைகள் வழங்கப்பட்டவர்கள் 399 பேர் என்று ஆகமொத்தம் 1,86,13,872 பேர் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

மேலும் 10,969 சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், 463 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2892 செவிலியர்கள் இந்த மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் தற்போது 3 ஆண்டுகளை முழுமையாக கடந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது, மிக விரைவில் 2 கோடி பயனாளிகள் என்ற இலக்கை அடையவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும்போது, முதல் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தந்து, 1 கோடி பயனாளிகளை இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அது தற்போது 1.86 கோடி பயனாளிகளை கடந்து 2 கோடியாவது பயனாளியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் 100% பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகளை அளிக்க முடியும் ஆனால் நகர்புறங்களில் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இந்த திட்டத்தை கொண்டு செல்வது சவாலான விஷயமாகும். ஆனால் இதில் நமது பொது சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு, தகுதி படைத்த மக்கள் தொகை (Eligibility Population) 58,94,860 என்று கண்டறியப்பட்டு, அதில் இதுவரை 53,05,373 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சென்னையில் மட்டும் இரத்த அழுத்த நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 6,03,250 பேர், நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தவர்கள் 3,65,679 பேர், இரண்டும் சேர்ந்து இருந்தவர்கள் 3,03,203 பேர், இயன்முறை சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 14,066 பேர், நோய் ஆதரவு சிகிச்சை 8,038, டயாலிசிஸ் பைகள் வழங்கப்பட்டவர்கள் 77 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

மேலும், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களையும் அணுகி அவர்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் யாருக்காவது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள் தேவைப்பட்டால் 104 என்ற அவசர உதவி எண்ணை அழைத்தால் உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.

வீடுகளில் இருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விடுவதால் இந்த திட்டத்தின் பயன் கிடைக்காமல் இருந்ததை போக்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த நிதிநிலை அறிவிப்புகளில் தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டம் அறிவிக்கப்பட்டு 09.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் வட்டாரத்தில் உள்ள Hyundai Mobis தொழிற்சாலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த திட்டத்தின்படி இதுவரை 609 தொழிற்கூடங்களில் இதுவரை 3,05,300 பேருக்கு பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டு, 11,695 பேருக்கு ஏற்கனவே தொற்றா நோய் பாதிப்புகள் உள்ளவர்களாகவும், புதியதாக நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 26,861 பேரும் கண்டறியப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கிண்டி, அம்பத்தூர் புதியதாக உருவாகிவரும் திருமுல்லைவாயில் போன்ற தொழிற்பேட்டைகளில் எல்லாம் 100% தொழிலாளர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது. மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகள் செய்து வருகிறது. கடந்த வாரம் பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சி.ஐ.டி நகரில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சியை சேர்ந்த மாவட்ட அளவிலான நிர்வாகிகள், நகர்புறத்தை சேர்ந்த மாவட்ட அளவிலான நிர்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி பருவ மழைக்கு முன்னாள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் கடந்த காலங்களில் நடத்தப்பட்டதை போன்று இந்த ஆண்டும் நடத்தப்படவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 3,300 பேர் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற பணிகளில் தினந்தோறும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முன்னரே தொடங்கி வைக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகளுக்குகாக சாலைகள் வெட்டுப்பட்டது. தற்போது 90% பணிகள் முடிவுற்றுள்ளது. சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது." என்றார்.

Also Read: கொளத்தூரில் ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் !