Politics
தமிழ்நாடு மருத்துவ மாணவர்களுக்கு தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் - வைகோ கண்டனம் !
தேசியத் தேர்வு முகமை நடத்த உள்ள முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது.அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் காரணமாக நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு மைய நுழைவு சீட்டு ஆக.8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31 அன்று வெளியானது. இதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு அனந்த்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கர்னூலில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ரயில்கள் எதிலும் இடங்கள் இல்லை. விமான கட்டணங்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. செல்வதற்கு மட்டும் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகிறது. இதுபோக அங்கே தங்குவதற்கு, இருப்பதற்குத் தனியாக செலவழிக்க வேண்டும். திரும்பி வர வேண்டும். பெண் என்பதால் உடன் யாராவது வர வேண்டியிருக்கிறது. ஒரு தேர்வை எழுதுவதற்காக மட்டும் எவ்வளவு செலவழிக்க முடியும்? என்று அந்த மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதைப்போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ராஜமுந்திரி போன்ற ஆந்திரப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதனால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மன உளைச்சலையும் வீண் அலைச்சலையும் தேசியத் தேர்வு முகமை ஏற்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது.
நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வலுவாக குரல் கொடுத்து வரும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுத முயலும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்களை தொலைதூரத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு அனுப்புவது என்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.மருத்துவ கட்டமைப்புகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் இருந்து இனி எவரும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதித்து விடக்கூடாது என்று வட புலத்தில் இருக்கும் அக்கறை உள்ள சக்திகள் முயற்சிப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.இது வன்மையான கண்டனத்துக்குரியது.
உடனடியாக ஒன்றிய அரசு இதனை கவனத்தில் கொண்டு, தேசியத் தேர்வு முகமை நடத்த உள்ள முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!