Politics

"நிலத்தை ஒரு ரூபாய்க்கு தொழிலதிபர்களுக்கு கொடுக்க முடியாது" - ஒன்றிய அரசின் நிதியை மறுத்த இமாச்சல் அரசு !

இமாச்சலப் பிரதேச அரசு சோலன் மாவட்டத்தில் உள்ள நலகர் என்ற இடத்தில் ரூ.350 கோடி செலவில் மருத்துவ சாதன தொழிற்பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. 265 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு பணிகளையும் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்த ஒன்றிய அரசு சார்பில் ரூ.30 கோடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை மாநில அரசு ஒன்றிய அரசுக்கே திரும்ப அனுப்பியுள்ளது. மேலும் , இந்த திட்டத்த்தில் ஒன்றிய அரசை சேர்க்காமல் மாநில அரசே முழு செலவையும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், "மருத்துவ சாதன தொழிற்பூங்கா திட்டத்துக்காக இதுவரை 74.95 கோடி ரூபாயை மாநில அரசு செலவு செய்துள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து இந்த திட்டத்துக்காக பெறப்பட்ட ரூ. 30 கோடியை திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

himachal pradesh cm Sukhvinder Singh Sukhu

ஒன்றிய அரசின் ரூ.30 கோடியை பெற்றுக்கொண்டால் தொழிலதிபர்களுக்கு ஒரு சதுரடி நிலத்தை ஒரு ரூபாய்க்கும், ஒரு யூனிட் மின்சாரத்தை 3 ரூபாய்க்கும் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும், மற்ற வசதிகளை அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாகவும் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

மாநிலத்தின் நலன்களைக் காத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எடுத்ததன் மூலம் மாநில அரசுக்கு அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.500 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது"என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Also Read: திமுகவின் சட்டப்போராட்டத்தால் பலன்பெற்ற 15,066 OBC மாணவர்கள் : திமுக MP வில்சன் பெருமிதம் !