Politics
பட்ஜெட்டில் புறக்கணிப்பு : "பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" - தயாநிதி மாறன் MP ஆவேசம் !
2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார். இது குறித்துப் பேசிய அவர், "தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த பிறகும் கூட நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆனால் இதை எல்லாம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செலக்டிவ் அம்னீஷியா வந்துள்ளது போல் பலவற்றை மறந்து விடுகிறார்.
கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஏன் ஒப்புதல் வழங்கவில்லை? பிரதமர் மோடி கூட்டணிக் கட்சிகள் நலனை மட்டுமே கருத்தில் கொள்கிறார். பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
'வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து ஆட்சியை நடத்துவேன்,' என தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்போது கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று பிரதமர், தனது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்குக் கூட இல்லாமல், ஆதரிக்கும் கட்சிகளுக்காக மட்டும் வேலை பார்த்து பட்ஜெட் அறிவித்திருக்கிறார். எங்கள் முதலமைச்சரின் அறிவுரை பெற்று, அவரை பின்பற்றி, பிரதமர் நல்லாட்சி நடத்திட வேண்டும்!” என்று ஒன்றிய அரசுக்கு அறிவுரையும் வழங்கினார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!