Politics

திராவிட மாடல் திட்டங்கள் முதல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரை... பட்ஜெட்டில் இடம்பிடித்த திட்டங்கள் என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 23) ஒன்றிய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு சில திட்டங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலும், பாஜக மற்றும் அதன் கூட்டணியாக பீகார், ஆந்திராவுக்கே சிறப்பு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பீஹாருக்கு ரூ.37,500 கோடி, ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி என மொத்தம் ரூ.52,500 கோடி கூட்டணிக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முற்றுலுமாக புறந்தள்ளியுள்ளது பாஜக.

எனினும் எதிர்க்கட்சிகளின் முக்கிய திட்டங்களையே இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பாஜக. அதில் முக்கியமானவை வருமாறு :

=> பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் :

"நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்" என ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பே பணிபுரியும் பெண்களுக்கு என்று, 'தோழி விடுதி' நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த விடுதி மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

=> இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி :

”1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்படும்" என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான 'நான் முதல்வன் திட்டத்தின்' மறு வடிவம் என்றே கூறலாம். தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனுக்காக நடைமுறையில் இருக்கும் சிறப்பான திட்டமான 'நான் முதல்வன் திட்டம்' மூலம் பல லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டம் மூலம் வெளி மாநில, வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான செலவையும் அரசே பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தால் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இந்த திட்டமானது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல், பயிற்சிப் பணி திட்டம் இடம்பெற்றுள்ளது.

=> புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை :

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு 3 மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த 'வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை' குறித்த திட்டமும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் இடம்பெற்றுள்ளது.

Also Read: “வன்மத்தைக் கக்கும் நிதிநிலை அறிக்கை... மிகப்பெரிய ஏமாற்றம்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!