Politics

“முதல்வர் பதவி எங்களுக்குதான்” - தேர்தலுக்கு முன்பே தீவிர மோதலில் மராட்டிய பாஜக கூட்டணி !

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தோல்வியினால் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர்கள் என்ற மோதல் தற்போதே பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ளது. பாஜக தரப்பில் தாங்கள் இந்த முறை 100க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவோம் என்றும், அதிக இடத்தில் வெற்றி பெறும் கட்சிக்கே முதல்வர் பதவி என்றும் அதன் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல ஷிண்டே சார்பிலும், முதல்வர் பதவியே விட்டுகொடுக்கும் எண்ணமே இல்லை என்றும், அடுத்த தேர்தலிலும் தங்கள் கட்சி 100 இடங்களுக்கு மேல் போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தவிர அஜித் பவாரின் தேசியவாத கட்சியும் தாங்களும் 100 இடங்களுக்கு மேல் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளது பாஜக கூட்டணியில் பெரும் பிளவு இருப்பதை உறுதி படுத்தியுள்ளது.

Also Read: இஸ்ரேல் மீது ஏமனின் ஹெய்தி அமைப்பு தாக்குதல் - பதிலடி கொடுத்த இஸ்ரேல்... எல்லைகளை தாண்டும் போர் பதற்றம் !