Politics

”தவறுகளில் இருந்து பாடம் கற்காத பா.ஜ.க அரசு”: தி.மு.க MPக்கள் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, விசிக, கம்யுனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை கட்சிகளின் அவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே, கொடிக்குன்னில் சுரேஷ், கவுரவ் கோகோய், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் டி.ஆர்.பாலு,திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ” நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் உள்ளது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும், கவன ஈர்ப்ப தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்களுக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. மதச்சார்பற்ற தன்மை என்பது மோடி அரசில் கேள்விக்குறியாகி வருகிறது.

கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி செய்து கொள்ளும் என எதிர்பார்த்தோம். ஆனால் மாறாக, மோடி அரசு இன்னும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.பட்ஜெட் நிதி முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 60:40 என்ற அளவில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் 60% நிதியை ஒன்றிய அரசு முறையாக வழங்குவது இல்லை. மாநிலங்களுக்கான வரியை பகிர்ந்து அளிப்பதில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது.

3 புதிய சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் இந்தி ஆதிக்கம் தொடர்ந்தால் தமிழ்நாடு அதை ஒருபோதும் அனுமதிக்காது. 1965 மீண்டும் வரும். தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழி புரட்சியை முன்னெடுக்கும். பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பத்திரிக்கையாளர்களை ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வரவில்லை, எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் நியாயமான போராட்டங்களை ஒன்றிய அரசால் திசை திருப்பப்படுகிறது." என தெரிவித்துள்ளனர்.

Also Read: சென்னானூர் அகழாய்வு : தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்கெடுப்பு!