Politics

குற்றவியல் சட்டங்களை தொடர்ந்து விமான சட்டம்: இந்திமயமாக்க துடிக்கும் பாஜக -பட்ஜெட் கூட்டத்தொடரில் Plan!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ, இந்தி திணிப்பு போன்றவைகளை செய்து வருகிறது. குறிப்பாக பிராந்திய மொழிகளை அழித்து, இந்தியை நாட்டின் மொழியாக அறிவிக்க துடிப்பு காட்டி வருகிறது. தேசிய மொழியாக எந்த மொழியும் தற்போது வரை இந்திய அரசு அறிவிக்கப்படாத நிலையில், இந்தியை அதில் இடம்பெற செய்ய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், மேற்கு வங்கம் போன்ற நாட்டின் பல்வேறு இடங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது. எனினும் பாஜக இப்போதும் இந்தி திணிப்பை விடுவது போல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச மறுத்த பாஜகவை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் வாய்ப்பு என்று எண்ணிய பாஜக, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்களையும் சஸ்பெண்ட் செய்தது.

பின்னர் IPC, CrPC, Indian Evidence ஆகிய 3 சட்டங்களையும் திருத்தம் செய்து, அதன் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதீய சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் என்று ஹிந்தியில் மாற்றியது பாஜக. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமானது கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதற்கு எதிராக பல்வேறு சட்டத்துறை சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக பலரும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்த சூழலில் தற்போது விமான சட்டத்துக்கும் ஹிந்தியில் பெயர் மாற்ற பாஜக திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1934-ல் கொண்டு வரப்பட்ட Aircraft Act என்று அழைக்கப்படும் விமான சட்டமானது, விமானத்தின் உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டம் ஆகும்.

இந்த சட்டமானது நாட்டிலுள்ள அனைவர்க்கும் புரியும்படி ஆங்கிலத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது பாரதிய வாயுவான் வித்யாக் (Bharatiya Vayuyan Vidheyak) என்று ஹிந்தியில் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானங்களில் எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிக்கவும், அதன் விற்பனை, விமான பராமரிப்புக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கவும் இந்த மசோதா மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று பாஜக செய்வது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கப்பதாக இருக்கும். நாட்டின் பொது மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் இருக்கும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றுவது பல்வேறு மாநிலத்தவருக்கு புரியாத வண்ணமாக இருக்கும். இப்படி படிப்படியாக வேண்டுமென்றே ஒவ்வொன்றையும் ஹிந்தியில் மாற்ற முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Also Read: ”பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் பா.ஜ.க அரசு” : முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!