Politics

உத்தரப் பிரதேச பா.ஜ.க.வின் உட்கட்சி மோதல்! : முடிவுக்கு வருகிறதா யோகி காலம்?

தேசிய அளவில், பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷாவா அல்லது யோகியா என்கிற பேச்சு எழுகிற அளவிற்கு, யோகி ஆதித்யநாத் அலை காணப்பட்டு வந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் யோகி நீடிப்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

அதற்கு, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க கண்ட சரிவும் ஒரு மிகப்பெரிய காரணமாய் அமைந்துள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னிச்சையாக செயல்படுவதாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூரா குற்றம்சாட்டியது கூடுதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியை காக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூரா மற்றும் உத்தரப் பிரதேச பா.ஜ.க தலைவர் சௌத்ரி பூபேந்திர சிங் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே, யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநரையும், அமைச்சர்களையும் சந்தித்தார். இதனால், உத்தரப் பிரதேச பா.ஜ.க.வில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ், “உத்தரப் பிரதேசத்தில் பதவிக்காக, பா.ஜ.க.வினர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகின்றனர். இந்நடவடிக்கைகள், பா.ஜ.க ஆட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன. அரசை விட கட்சி பெரியது என கூறுபவர் ஒருபுறம், காணொளி வெளியிட்டு பேசுபவர் மறுபுறம், பா.ஜ.க.வின் தலைமையை கேட்காமல் பேசும் பா.ஜ.க மூத்த தலைவர் வேறொருபுறம் என நாளுக்கு நாள் பா.ஜ.க.வின் நிலை மோசமாகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: நாடகம் நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆதாரங்களுடன் கண்டனம்!