Politics

78 நாட்களில் 11 தீவிரவாத தாக்குதல்கள்! : பாதுகாப்புத் துறையில் பா.ஜ.க.வின் அலட்சியம்!

நாட்டின் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துகிறோம் என்றும், நாட்டுப்பற்று மிக்கவர்கள் தாங்கள் தான் என்றும் பிரச்சாரம் செய்து வரும் பா.ஜ.க, ஆட்சியைப் பிடித்தது முதல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையே விளைவித்து வருவது அம்பலப்பட தொடங்கியுள்ளது.

குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதிகளில், கடந்த ஓராண்டில் தீவிரவாத தாக்குதல்கள் உச்சம் தொட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு நிலையை நீக்கியதே, இதற்கு முதன்மை காரணம் என்றும் பல தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், ஜம்மு - காஷ்மீர் சி.பி.ஐ (எம்) தலைவர் தாரிகாமி, “பாஜகவின் ஆட்சியில் கதுவா, தோடா, ரியாசி, ரஜோரி-பூஞ்ச் ​​உள்ளிட்ட பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பியதாக ஒன்றிய அரசு கட்டுக்கதைகள் கட்டுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதம் எழுவதற்கு என்ன காரணம் என்பதை ஒன்றிய அரசு சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், இன்றைய நாள் (16.7.24), ஜம்மு - காஷ்மீரின் தோடா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நடத்தி 4 இராணுவ வீரர்கள் இறந்தது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பா.ஜ.க.வின் தவறான திட்டங்களால், தேசிய பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டு, இராணுவ வீரர்களின் குடும்பங்களும், ஏழை எல்லைப்பகுதி வாழ் மக்களும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றிணைய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

அதனையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே, “ஒன்றிய பா.ஜ.க அரசின் பொய் பரப்பல்களுக்கு பின்னிலையில் இருக்கிற உண்மை என்னவென்றால், கடந்த 78 நாட்களில் 11 தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. அதில், 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதே!” என குற்றம் சாட்டினார்.

எனினும், இராணுவத்தினர் கொல்லப்பட்டது இயல்பானது தான் என்பது போல, ஒன்றிய பா.ஜ.க.வினர், இந்நிகழ்வில் பெரிதும் தலையிடாமல், வேறு சிக்கல்களை உருவாக்கி வருகின்றனர்.

Also Read: காவிரி நதிநீர் விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்ட 3 தீர்மானங்கள் என்னென்ன?