Politics
எதிர்காலத்தை புறந்தள்ளி, கடந்த காலத்தை பேசும் பா.ஜ.க! : அம்பலமான பா.ஜ.க.வின் திசைதிருப்பல்!
கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள அல்லது முன்மொழியப்பட்டுள்ள பல திட்டங்கள், இந்திய மக்களின் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக அமைந்துள்ளது.
அவ்வகையில், ஒன்றிய கல்வித்துறையின் கீழ் செயல்படும் தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்திய தேசிய தேர்வுகளில் நடந்த குளறுபடிகள், மோசடிகள் இளைஞர்களை வஞ்சித்து வருவது ஒருபுறம்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல், அலைமோதும் இளைஞர்கள் மறுபுறம். வன்முறையாலும், அடக்குமுறையாலும் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் மற்றொரு புறம் என நிகழ்காலம் பாழாகி, எதிர்காலத்தையும் பாழாக்குகிற நடவடிக்கைகளை பா.ஜ.க எடுத்து வருகிறது.
எனினும், அவை எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட “அவசர நிலையை” (Emergency) பா.ஜ.க.வினரும், ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்களும், 47 ஆண்டுகளுக்கு பிறகு முதன்மைப்படுத்தி வருகிறார்கள்.
இதனால், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கூட தங்களது கண்டனங்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சிவசேனா (தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “சூலை 2023 கணிப்புப்படி, இந்தியர்களின் சராசரி வயது 28ஆக இருக்கிறது. எனினும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்காமல், பல ஆண்டுக்கு முந்தைய சிக்கல் குறித்து பேசி வருகிறார்” என குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பத்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தியதால், பெரும்பான்மையை மக்கள் பறித்திருக்கும் சூழலில், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளை ‘அரசியலமைப்பு கொல்லப்பட்ட நாளாக’ கடைபிடிக்கும்படி Non Biological பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பிரதமர் ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம்தான், மநு ஸ்மிருதியை ஏற்கவில்லையென்ற காரணத்தை சொல்லி, நவம்பர் 1949-ல் அரசியலமைப்பை நிராகரித்தவர்கள்” என சாடியுள்ளார்.
இதனால், ஆட்சியைப் பிடித்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், மக்களை கீழே தள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பா.ஜ.க.விற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!